விஜய நல்லதம்பி 
தமிழகம்

கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது புகார் அளித்த அதிமுக முன்னாள் நிர்வாகி மோசடி வழக்கில் கைது

செய்திப்பிரிவு

விருதுநகர்: முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது மோசடி புகார் அளித்த அதிமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் விஜய நல்லதம்பி கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்தவர் விஜய நல்லதம்பி. இவர் சட்டப் பேரவை முன்னாள் தலைவர் கா.காளிமுத்துவின் கடைசி தம்பி.

இவர் அதிமுகவில் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மற்றும் மாவட்ட மாணவர் அணிச் செயலாளராகவும் பணியாற்றியவர். வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2021 பிப்ரவரி வரை கூட்டுறவு, சத்துணவு, ஆவின், ரேஷன் கடை, ஊராட்சி எழுத்தர் ஆகிய பதவிகளுக்குப் பல பேரிடம் பணம் வாங்கி முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியதன்பேரில் அவரது உதவியாளர்களிடம் கொடுத்ததாக மாவட்டக் குற்றப் பிரிவில் புகார் அளித்தார். இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் விஜய நல்லதம்பி மீது சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் மாவட்டக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் நவ.15-ல் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தனது அக்காள் மகன் ஆனந்துக்கு ஆவினில் மேலாளர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி விஜய நல்லதம்பி ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுத்து ரூ.30 லட்சத்தை வட்டியுடன் பெற்றுத்தர வேண்டும் எனவும் புகார் அளித்திருந்தார்.

இதன்பேரில் விஜய நல்லதம்பி மீது மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில், கோவில்பட்டியை அடுத்த புளியங்குளத்தில் ஒரு ஆசிரமத்தின் அருகே விஜய நல்லதம்பி பதுங்கியிருப்பது அவரது மொபைல் போன் சிக்னல் மூலம் தெரிய வந்தது. இதையடுத்து அங்கு சென்ற தனிப்படை போலீஸார் நேற்று அதிகாலை விஜய நல்லதம்பியை கைது செய்தனர்.

பின்னர், விருதுநகரில் உள்ள மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு அவரை அழைத்து வந்தனர். அவரிடம் காவல் கண்காணிப்பாளர் மனோகர், கூடுதல் எஸ்.பி. குத்தாலிங்கம், டிஎஸ்பி கண்ணன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது, யார் யாரிடம் எதற்காகப் பணம் பெற்றார், அதை எப்போது யார் யாருக்குச் செலுத்தினார், வங்கி அல்லது மொபைல் போன் மூலம் பணப் பரிவர்த்தனை நடந்ததா அல்லது நேரில் கொடுக்கப்பட்டதா?, அதற்கான ஆதாரங்கள் குறித்து விசாரணை நடைபெற்றது. விஜய நல்லதம்பியின் வாக்குமூலத்தை போலீஸார் வீடியோவில் பதிவு செய்தனர்.

ஆவின் மட்டுமின்றி அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 20-க்கும் மேற்பட்டோரிடம் பல லட்சம் ரூபாய் வாங்கி விஜய நல்லதம்பி மோசடி செய்ததாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இது குறித்தும் அவரிடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT