தமிழகம்

கோவை மாநகரில் 30-க்கும் மேற்பட்ட சாலையோரங்களில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு: முடிவை மறுபரிசீலனை செய்ய தொழில், நுகர்வோர் அமைப்பினர் வலியுறுத்தல்

பெ.ஸ்ரீனிவாசன்

கோவை மாநகரில் பிரதான சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கும் முடிவை மாநகராட்சி மறுபரீசிலனை செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சியின் நிதி வருவாயை பெருக்கும் வகையில், மாநகரில் 30 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தவும், கட்டணம் நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சாலைகள் மற்றும் கட்டண விவரம்

முதல்கட்டமாக ‘ஆன் ஸ்ட்ரீட் பார்க்கிங்’ அடிப்படையில் நவாப் ஹகீம் சாலை, ஒப்பணக்கார வீதி, ரங்கே கவுடர் வீதி, இடையர் வீதி, வெரைட்டிஹால் சாலை, ராஜ வீதி, பெரிய கடை வீதி, பேரூர் பிரதான வீதி, மேட்டுப்பாளையம் சாலை, டி.வி.சாமி சாலை கிழக்கு மற்றும் மேற்கு, கவுலிபிரவுன் சாலை, டி.பி.சாலை, பாரதி பார்க் சாலை, அழகேசன் சாலை, என்.எஸ்.ஆர். சாலை, ராஜேந்திர பிரசாத் சாலை, பவர் ஹவுஸ் சாலை, பவர் ஹவுஸ் சாலை கிழக்கு மற்றும் மேற்கு, கிராஸ்கட் சாலை, சத்தியமங்கலம் சாலை, நஞ்சப்பா சாலை, சத்தியமூர்த்தி சாலை, பழைய அஞ்சல் அலுவலக சாலை, ஸ்டேட் வங்கி சாலை, அவிநாசி சாலை, அரசு கலைக் கல்லூரி சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, காமராஜ் சாலை என மொத்தமாக 30 சாலைகளில் 28.63 கி.மீ. தூரத்துக்கான இடங்களில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

அனைத்து இடங்களிலும் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.10-ம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை உள்ளிட்ட 10 சாலைகளில் மட்டும் ஒரு மணி நேரத்துக்கு ரூ.40-ம், பிற சாலைகளில் ரூ.30-ம் கட்டணமாக வசூலிக்கப்படவுள்ளது.

‘ஆஃப் ஸ்ட்ரீட் பார்க்கிங்’ அடிப்படையில், வாகனங்கள் நிறுத்த தனியாக இடம் ஒதுக்கப்பட்டு, ஒரு மணி நேரத்துக்கு நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20-ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.5-ம் கட்டணம் நிர்ணயம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. மாத வாடகை அடிப்படையில் நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.2,400-ம், இருசக்கர வாகனங்களுக்கு ரூ.600-ம் கட்டணம் நிர்ணயம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) தலைவர் சி.சிவக்குமார் கூறும்போது, “சாலையோரங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முடிவை மாநகராட்சி மறுபரிசீலனை செய்ய வேண்டும். சாலையோரங்களில் காலியாக இருக்கும் இடங்களிலேயே வாகனங்களை நிறுத்துகிறோம். அதற்கு கட்டணம் வசூலிப்பது சரியல்ல. மாறாக, பல அடுக்கு வாகன நிறுத்தம் போன்ற திட்டங்களைப் பரவலாக ஏற்படுத்தலாம்” என்றார்.

கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜ்குமார் கூறும்போது, “இதுபோன்ற திட்டங்களை மக்களின் கருத்தையறிந்து கொண்டு வருவதே சரியானதாக இருக்கும்” என்றார்.

கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் என்.லோகு கூறும்போது, “மாநகரில் முக்கிய சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு மாநகராட்சியால் கட்டணம் வசூலிப்பது முன்பு நடைமுறையில் இருந்தது. பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக நீக்கப்பட்டது. இச்சூழலில் மீண்டும் கட்டணம் வசூலிப்பது தவறான முன்னுதாரணம். எனவே, மாநகராட்சி இத்திட்டத்தை கைவிட்டு கோவையில் உள்ள அடுக்குமாடி வர்த்தக கட்டிடங்களில் வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “இத்திட்டமானது பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், நீண்ட நேரம், நீண்ட நாட்கள் வாகனங்களை நிறுத்திவைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் அடிப்படையில் கொண்டு வரப்படுகிறது” என்றனர்.

வானதி சீனிவாசன் எம்எல்ஏ கண்டனம்: பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகரில் 30 சாலைகள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பொதுமக்கள் கார்களை நிறுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ.30, சில பகுதிகளில் ரூ.40, இரு சக்கர வாகனங்களை நிறுத்த ஒரு மணி நேரத்துக்கு ரூ.10 என்று மிக அதிக அளவில் கட்டணம் அறிவிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசின் இந்த முடிவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறு, சிறு தொழில்கள் நிறைந்த கோவை மாநகரில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போர் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் அனைவரும் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்கள். அதிக கட்டணத்தால் வாகனங்களை குடியிருப்பு பகுதியில் நிறுத்தி விடுவார்கள். இதனால் வேறு சில பிரச்சினைகள் எழக்கூடும். வியாபாரமும் பாதிக்கப்படும். கோவை மாநகர பகுதியில் காலியாக உள்ள வணிக வளாகங்கள், காலி இடங்களை பயன்படுத்தி வருவாய் ஈட்டுவதில் மாநகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். மாறாக, வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலித்து, மக்களைக் கசக்கிப் பிழிவது எந்த வகையிலும் நியாயம் அல்ல. மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் இம்முடிவை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT