கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேங்காய் மகசூல அதிகரிப்பால் விலை கடந்த காலங்களைவிட 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. இதனால், தென்னை சாகுபடி விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதியில் தென்னை விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. குறிப்பாக கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், வேலம்பட்டி, பாரூர், நெடுங்கல், மருதேரி, அரசம்பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர், பர்கூர், மஞ்சமேடு உள்ளிட்ட பகுதிகளில் 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 15 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன.
75 ஆயிரத்துக்கும்...
தென்னை விவசாயத்தை மையமாக வைத்து தேங்காய் மண்டிகளும், துடைப்பம், நார் தயாரிக்கும் சிறுத்தொழில்களும், கொப்பரை, தென்னை ஓடு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மூலம் சுமார் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.
இங்கு விளையும் தேங்காய்கள் தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திர மாநிலம் திருப்பதி, காளஸ்தி, கர்நாடக மாநிலம் பெங்களூரு, குஜராத், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கும் விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
மகசூல் அதிகரிப்பு
ஆண்டுதொறும் பெய்யும் மழையை பொறுத்து மகசூல் இருக்கும். தற்போது, விளைச்சல் அதிகரிப்பால், தேங்காய் விலை குறைந்துள்ளது. இதனால், போதிய விலையில்லாமல் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக போச்சம்பள்ளி பகுதி தென்னை விவசாயிகள் கூறியதாவது:
கடந்த அக்டோபர் மாதம் ஒரு தேங்காய் (அளவை பொறுத்து) ரூ.14 வரை விற்பனையானது. வழக்கமாக நீர்பாசனம் உள்ள மரங்களில் காய்ப்பு அதிகமாகவும், வறட்சி பகுதிகளில் காய்ப்பு குறைவாகவும் இருக்கும். தமிழகம் முழுவதும் கடந்தாண்டு பெய்த தொடர் மழையால் வழக்கத்தைவிட தேங்காய் மகசூல் அதிகாித்துள்ளது. மேலும், ஊரடங்கில் கோயில்கள் திறக்கப்படுதில்லை. இதனால் தேங்காய் விற்பனையும் கடந்த காலங்களை விட சரிந்துள்ளது. தற்போது, ஒரு தேங்காய் (அளவை பொறுத்து) ரூ.7-க்கு விற்பனையாகிறது.
விலை 50 சதவீதம் வரை குறைந்துள்ளதால், தேங்காய் விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. தேங்காய் பறிப்புக் கூலி, உரிப்புக் கூலி என கணக்கிட்டால் உரிய விலை கிடைப்பதில்லை, என்றனர்.