மதுரை அதிமுக வேட்பாளர்கள் பட்டியலில் செல்வாக்கு இல்லாத மேலும் சிலர் மாற்றப்படலாம் எனக் கூறப்படுவதால், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்ட அதிமுகவில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்த நாள் முதல் அக்கட்சி நிர்வாகிகள் சீட் கிடைக்க குடும்பத்துடன் பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். பலர் வீடுகளிலேயே யாகங்கள், பரிகார பூஜைகள் மேற்கொண்டனர். முக்கிய நிர்வாகிகள், கடந்த சில வாரங்களாக சென்னையிலே முகாமிட்டு, கட்சித் தலைமைக்கு நெருக்கமான அமைச் சர்கள் மூலம் சீட் பெற காய் நகர்த்தி வந்தனர். சில வாரங்களுக்கு முன் அதிமுகவில் முக்கிய அமைச்சர்கள் பலரை அக்கட்சி மேலிடம் ஓரங்கட்டியது. அவர்கள் மூலம் சீட் கிடைக்க முயற்சி செய்தவர்கள் அதிர்ச் சியடைந்தனர். அதனால் மற்றவர்கள் மூலம் முயற்சியைத் தொடர்ந்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட மதுரை மாவட்டத்துக்கான 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் கே.செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் தவிர, மற்றவர்கள் அனைவரும் புதியவர்கள். பெண்கள் ஒருவருக்கு கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 6 எம்எல்ஏ-க்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் மறுக்கப்பட்டது. அதிருப்தியடைந்த அவர்கள் வெளிக்காட்டினால் கட்சித் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்துவிடும் என்பதால் உள்ளுக்குள் அதிருப்தியுடன் இருந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முதல் அதிமுக வேட்பாளர் பட்டியலில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. மதுரை வடக்குத்தொகுதி வேட் பாளராக அறிவிக்கப்பட்ட எம்.எஸ்.பாண்டியனுக்கு பதிலாக மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா அறிவி க்கப்பட்டார். எம்.எஸ்.பாண்டியன் கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஓரளவுக்கு செல்வாக்கானவர். எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர். அவரே மாற்றப்பட்டதால் கட்சியிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்கு இல்லாத மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் அறிவிக்கப்பட்ட மேலும் சில வேட்பாளர்கள் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் கட்சி நிர்வாகிகளும், வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் மீது கட்சித் தலைமைக்கு புகார்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். அதனால், வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மதுரை அதிமுகவினர் கலக்கம் அடைந்துள்ளனர்.