முழு ஊரடங்கால் வாகனப் போக்குவரத்தின்றி நேற்று வெறுமையாக காணப்பட்ட திருநெல்வேலி வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் பகுதி. படம்: மு. லெட்சுமி அருண். 
தமிழகம்

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் முழு ஊரடங்கால் சந்தைகள், வணிக நிறுவனங்கள் மூடல்: வீடுகளில் மக்கள் முடக்கம், வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடின

செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் முழு ஊரடங்கால் சந்தைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடின.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தினமும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

இரண்டாவது வாரமாக நேற்று முழு ஊரடங்கால் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சந்தைகள், கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பெட்ரோல் பங்க் திறந்திருந்தன. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது.

முழு ஊரடங்கையொட்டி போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் சென்றவர்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், தச்சநல்லூர், களக்காடு, வள்ளியூர், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, விக்கிரமசிங்கபுரம், தென்காசி, ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், சுரண்டை, சங்கரன்கோவில், செங்கோட்டை, புளியங்குடி, கடையநல்லூர் உட்பட அனைத்து பகுதிகளிலும் வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சாலைகளில் சுற்றித் திரிந்த ஆதரவற்றோருக்கு தன்னார்வலர்கள், காவல்துறையினர் உணவு வழங்கினர்.

முழு ஊரடங்கால் மூன்றாவது நாளாக குற்றாலம் வெறிச்சோடி காணப்பட்டது. அருவிகளில் மிகவும் குறைவான அளவிலேயே தண்ணீர் விழுந்தது. இதேபோல், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அகஸ்தியர் அருவிப் பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள வஉசி சந்தை, காமராஜ் காய்கறி சந்தை ஆகிய இரு பிரதான சந்தைகள் உள்ளிட்ட அனைத்து சந்தைகள், வணிக நிறுவனங்கள்், கடைகள் முழுமையாக மூடப்பட்டிருந்தன. தேனீர் கடைகள் கூட திறக்கப்படவில்லை. மருந்து கடைகள், ஹோட்டல்கள் திறந்திருந்தன.

வாகனங்கள் இயங்காததால் அனைத்து பிரதான சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர். மக்கள் வீடுகளில் முடங்கினர். சுற்றுலா மையங்கள் மற்றும் ஆன்மிக தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதுபோல உப்பளத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பெரும்பாலான தொழிலாளர்கள் நேற்று பணிகளுக்கு செல்லவில்லை. அத்தியாவசிய தொழிற்சாலைகள் மட்டும் இயங்கின. மாவட்டம் முழுவதும் 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரூ.26 லட்சம் அபராதம்

தூத்துக்குடி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆய்வு செய்தார். ஊரடங்கை மீறி சாலையில் சுற்றியவர்களை அழைத்து அறிவுரை கூறி, கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கினார்.

தொடர்ந்து எஸ்பி செய்தியாளர்களிடம் கூறும்போது, “தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 68 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் என 12,000-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது” என்றார்.

கோவில்பட்டி

கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், விளாத்திகுளம், வேம்பார் பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கோவில்பட்டியில் டிஎஸ்பி உதயசூரியன், விளாத்திகுளத்தில் டிஎஸ்பி பிரகாஷ், எட்டயபுரத்தில் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர் முகம்மது தலைமையில் போலீஸார் கண்காணிப்பு மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் முழு ஊரடங்கால் கடைகள் மூடப்பட்டிருந்தன. அவசர தேவைக்காக மட்டும் உரிய காரணங்களை போலீஸாரிடம் கூறி சிலர் வாகனங்களி்ல் பயணித்தனர். வழக்கமாக பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி நாற்கரை சாலை வாகனப் போக்குவரத்தின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நாகர்கோவில்-திருவனந்தபுரம் சாலை மற்றும் நகர, கிராமச் சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.

கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், கடற்கரை சாலைகள் மற்றும் சுற்றுலா மையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட், ரவுண்டானா, சூரிய அஸ்தமன மையம், காந்தி மண்டபம் செல்லும் வழிகளை போலீஸார் தடுப்புகள் அமைத்து மூடினர். திற்பரப்பு அருவி, வட்டக்கோட்டை, மாத்தூர் தொட்டிப்பாலம் உட்பட சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.

கோயில்கள் மூடல்

கோயில்கள், தேவாலயங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. வழக்கமான முறைப்படி பூஜைகள், ஜெபம் நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கம் போல் ஞாயிற்றுக் கிழமை என்பதால் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. பார்வதிபுரம் மேம்பாலம், மார்த்தாண்டம் மேம்பாலம் பகுதிகளில் பைக்கில் சென்ற இளைஞர்களை பிடித்து போலீஸார் அபராதம் விதித்ததுடன், வீடுகளில் இருக்குமாறு எச்சரித்து அனுப்பினர்.

மாவட்டம் முழுவதும் நேற்று 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினர். டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை.

SCROLL FOR NEXT