எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் மே 9-ம் தேதி தொடங்கும் என்று மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் ஆர்.விமலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட 20 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மொத்தம் 2,655 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 398 இடங்கள் (15 சதவீதம்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு (மத்திய அரசுக்கு) ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 2,257 இடங்கள் (85 சதவீதம்) மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரில் 100 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இவற்றில் 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக, மீதமுள்ள 85 இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன.
இவை தவிர சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் உள்ள 100 எம்பிபிஎஸ் இடங்களில், 65 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. அதேபோல் 8 தனியார் (சுயநிதி) மருத்துவ கல்லூரிகளில் உள்ள 1,010 எம்பிபிஎஸ் இடங்களில், 595 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 1,610 பிடிஎஸ் இடங்களில், 970 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் 2016-2017-ம் கல்வி ஆண்டுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 2,917 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 1,055 பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப விநியோகம் வரும் மே மாதம் 9-ம் தேதி தொடங்குகிறது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் ஆர்.விமலா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் குறித்த அறிவிக்கை வரும் மே மாதம் 8-ம் தேதி வெளியிடப்படும். 9-ம் தேதி முதல் விண்ணப்ப விற்பனை தொடங்கும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் 26-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்ப விற்பனை நடைபெறும். www.tnhealth.org என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 27-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியலை ஜூன் 15-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்ட கலந்தாய்வை ஜூலை மாதமும், இரண்டாம் கட்ட கலந்தாய்வை ஆகஸ்ட் மாதமும் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
இவ்வாறு டாக்டர் ஆர்.விமலா தெரிவித்தார்.