பழைய சாலையை தோண்டாமல் புதிய சாலை அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சாலைகள் போடும்போது, ஏற்கெனவே உள்ள சாலை மேலேயே மறுபடியும் சாலைகள் போடுவது வழக்கமாக இருக்கிறது. இது பல ஆண்டுகளாக நடக்கிறது. இதனால் சாலைகளின் உயரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 முதல் 6 அங்குலம் உயர்த்தப்படுகிறது. இதனால், கனமழைக் காலத்தில் வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் அவதிப்படுகின்றனர். சாலை விபத்துகளும் நடக்கின்றன. மற்றொருபுறம் தமிழக அரசுக்கு கூடுதல் செலவும் ஏற்படுகிறது.
எனவே, சாலை போடும்போது மேல்தள கட்டுமானத்தைச் சுரண்டி எடுத்து விட்டு அதேஅளவுக்கு மேற்தளம் போட வேண்டும். இதனால், ஆண்டுதோறும் சாலைகளின் உயரம் உயர்வது தடுக்க முடியும் என நெடுஞ்சாலைத் துறை சேர்ந்த வல்லுநர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை :
சென்னையில் சாலை பணிகளை இரவில் ஆய்வு செய்து, ‘மில்லிங்’ (பழைய சாலையை தோண்டாமல்) செய்யாமல் சாலை போடக் கூடாது அறிவுறுத்தி உள்ளேன். தலைமைச் செயலாளரும் ஆய்வு செய்து அறிவுறுத்தி உள்ளார். அதிகாரிகள் அனைவரும் கண்டிப்பாக மில்லிங் செய்த பிறகே சாலை பணிகளை மேற்கொள்ள வேண்டும். தவறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை மனதில் கொண்டு செயல்படவும். இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.