எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாள் நாளை (ஜன.17) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சசிகலா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
எம்ஜிஆரின் வளர்ச்சிக்கு அவரது கடின உழைப்பு, விடாமுயற்சி ஆகியவை காரணமாக இருந்தன. அவர் 136 திரைப்படங்களில் எண்ணற்ற கதாபாத்திரங்களில் நடித்துமக்களின் பாராட்டை பெற்று,வெற்றி நாயகராக வலம்வந்தார். எத்தனையோ எதிர்ப்புகள் வந்தபோதும், தான் நடிக்கும் படங்களில் சமூக சிந்தனைகள், ஏற்றுக்கொண்ட கொள்கைகளை முன்வைத்து, தொடர்ந்து மக்களிடம் கொண்டு சென்றார். அதிமுகதொடங்கிய 5 ஆண்டுகளில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தார். ஏழை மக்கள் முன்னேற்றமடைய பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி மக்களின் அன்பு, நம்பிக்கையை பெற்றார்.
மக்களின் மனங்களில் இன்றும் நிரந்தரமாக குடிகொண்டிருக்கும் எம்ஜிஆரின் 105-வது பிறந்தநாளில் ஏழைகள், முதியவர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கு இயன்ற உதவிகளை செய்தும், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செலுத்துவோம்.
கரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைப்பிடித்து, எம்ஜிஆரின் பிறந்தநாளை கொண்டாட வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து, தமிழகத்தில் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சி மீண்டும் மலர இந்த நன்னாளில் உறுதிமொழி ஏற்போம்.