மகர சங்கராந்தி, மாட்டுப் பொங்கல் விழாவையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் உள்ள மகா நந்திகேசுவரருக்கு நேற்று காய்கனி, இனிப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
மகர சங்கராந்தி, மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோயிலில் 12 அடி உயரம். 19.5 அடி நீளம். 8.25 அடி அகலம் கொண்ட மகா நந்திகேசுவரருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
200 கிலோ எடையில்...
பின்னர், மகா நந்திகேசுவர ருக்கு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய், கேரட் உள்ளிட்ட காய்கறிகள், ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழை, ஆப்பிள் போன்ற பழ வகைகள், இனிப்புகள், செவ்வந்தி, ரோஜா போன்ற மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த எடை 200 கிலோ என தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, நந்திகேசுவரருக்கு சிறப்பு ஆராதனையும், பின்னர் கோ பூஜையும் நடைபெற்றது. இதில் பசு, கன்றுக்கு சந்தனம், குங்குமப் பொட்டு வைத்து, மாலைகள் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து பசுவுக்குப் பொங்கல் ஊட்டப்பட்டது.
பக்தர்களுக்கு அனுமதி இல்லை
ஆண்டுதோறும் ஒரு டன்னுக்கு மேல் காய்கனிகள், இனிப்பு, மலர்களைக் கொண்டு வெகு விமரிசையாக நடைபெறும் இவ்விழா கடந்த ஆண்டைபோல, நிகழாண்டும் எளிமையாக நடத்தப்பட்டது. மேலும், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.