ஆனைமலை, முதுமலை புலிகள்காப்பகங்களில் யானை பொங்கல்விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள கோழிகமுத்தி முகாமில் கலீம், பரணி, வெங்கடேஷ், சின்னதம்பி உட்பட 27 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள வளர்ப்பு யானைகள் சவாரிக்காகவும், காட்டு யானைகளை விரட்டும் கும்கி யானைகளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளில் டாப்சிலிப் பகுதியில், யானை பொங்கல் கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி, நடப்பாண்டு கோழிகமுத்தி முகாமில் நேற்று யானை பொங்கல் விழா நடத்தப்பட்டது. ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராம சுப்ரமணியம், மாவட்ட வன அலுவலர் கணேசன் மற்றும் வனத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
அதிகாலை யானைகளை குளிக்க வைத்தும், அலங்காரம் செய்தும் தடுப்புகள் முன்பு பாகன்கள் நிறுத்திவைத்தனர். பின்னர், முகாமில் உள்ள பழங்குடியின பெண்கள் பாரம்பரிய முறைப்படி, புதுப்பானையில் பொங்கல் வைத்து, யானைகளுக்கு பிடித்த கரும்பு, வாழைப்பழம் உள்ளிட்ட உணவுகளை தயார் செய்தனர்.
பாகன்களின் கட்டளைக்கு ஏற்ப,முன்னங்கால்களை மடக்கி தும்பிக்கையை தூக்கி வளர்ப்பு யானைகள் வழிபாடு செய்தன. பின்னர், அவற்றுக்கு தயாரிக்கப்பட்ட உணவுகளை வனத்துறையினர் அளித்தனர். டாப்சிலிப் வந்த சுற்றுலா பயணிகள், வனத்துறை வாகனங்கள் மூலமாக கோழிகமுத்திக்கு அழைத்துவரப்பட்டனர். யானை பொங்கல் விழாவை ஆர்வத்துடன் அவர்கள் கண்டுகளித்தனர்.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா அச்சத்தால் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் யானை பொங்கல் விழா நேற்று நடத்தப்பட்டது. யானை களுக்கு சுற்றுலா பயணிகள் உணவளிக்க தடை விதிக்கப்பட்டது’’ என்றனர்.
உதகை
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உதகை மற்றும் கிராமப்புறங்களில் மாட்டுப் பொங்கலை ஒட்டி, கால்நடைகள் வைத்துள்ளவர்கள், அவற்றுக்கு வண்ணங்கள் பூசி ஊர்வலமாக அழைத்து வந்தனர்.முதுமலையில் உள்ள தெப்பக்காடு முகாமில் நேற்று யானை பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் தலைமை வகித்தார்.
சிறப்பு பூஜை செய்தும், பொங்கலிட்டும் யானைகளுக்கு பொங்கல், கரும்பு மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன. யானை பொங்கல் விழாவை ஆர்வமுடன் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.