சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருப்போரை மாநகராட்சி தொலைபேசி ஆலோசனை மையங்கள் மூலமாக 1 லட்சத்து 51 ஆயிரம் முறை அழைத்து ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக சென்னைமாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமை காரணமாக ஏற்படும் மன அழுத்தத்துக்கு ஆலோசனை வழங்கவும் சென்னைமாநகராட்சி சார்பில் ஒரு மண்டலத்துக்கு 1 வீதம் 15 தொலைபேசி ஆலோசனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் மாளிகையிலும் 24 மணிநேரமும் செயல்படும் தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் இருந்து தொலைபேசி அழைப்பாளர்கள் வீட்டுத் தனிமையில் உள்ள நபர்களிடம் சளி, காய்ச்சல், இருமல்,உடல்வலி மற்றும் தொண்டை வலி போன்ற கரோனா தொற்றுஅறிகுறிகள் தொடர்ந்து இருக்கிறதா என கேட்டறிந்து 5 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு அறிகுறிகள் தொடர்ந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல ஆலோசனை வழங்கப்படுகிறது.இந்த 16 மையங்களில் இருந்து கடந்த 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 124 தொலைபேசி அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தொலைபேசி ஆலோசனை மையத்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி நேற்று ஆய்வு செய்தார். அப்போது தொற்று பாதித்த நபர்களின் வீடுகளுக்கு சென்று, மாநகராட்சி தொலைபேசி ஆலோசனை மையங்களில் இருந்து நாள்தோறும் அழைப்புகளின் மூலம் உடல்நிலை குறித்த தகவல்கள் கேட்கப்பட்டு ஆலோசனை வழங்கப்படுகிறதா எனவும், கரோனா களப்பணியாளர்கள் நாள்தோறும் இல்லங்களுக்கு வருகைபுரிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ மற்றும் அடிப்படை தேவைகள் வழங்கப்படுகிறதா எனவும் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது மாநகராட்சி துணைஆணையர் எஸ்.மனிஷ், மத்திய வட்டார துணை ஆணையர்ஷேக் அப்துல் ரகுமான், மண்டலஅலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.