தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் சாலைகள் விதிமுறைக்கு உட்பட்டு முறையாக அமைக்கப்படுகிறதா என்பது குறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று முன்தினம் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தாம்பரம் மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.20 கோடிக்கு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் மாநில பேரிடர் மேலாண்மை நிதி 2021-22-ம் ஆண்டு நிதியின்கீழ் ரூ.9.63 கோடிக்கு 132 சாலைகளை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சாலை பணிகளில் முறைகேடு நடைபெற்றதாக, புகார்வந்துள்ளது. அதன்பேரில், அண்மையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை இணை இயக்குநர் உமா மகேஸ்வரி நேரில் சென்று பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சாலைகளின் உறுதி தன்மை, பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், சாலையின் நீளம், அளவு என அனைத்தும் சரியாக உள்ளதா என அதிகாரிகளிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
ஆய்வுக்கும் பின்னும் தொடர்ந்து அரசின் விதிகளுக்கு புறம்பாக சாலைகள் அமைக்கப்பட்டு வந்தன. குறிப்பாக குரோம்பேட்டை கட்டபொம்மன் தெரு, சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசின் உத்தரவை மீறி பழைய சாலையை அகற்றாமல் புதிய சாலை அமைத்து உயரம் அதிகரிக்கப்பட்டுள்ளது என அறப்போர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று முன்தினம் குரோம்பேட்டை கட்டபொம்மன் தெருவில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணி மற்றும் சாந்தி நகரில் அமைக்கப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து தாம்பரம் ஐஏஎஸ் சாலை பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பழைய சாலைகள், இயந்திரங்கள் மூலம் சரியாக அகழ்ந்தெடுக்கப்படுகிறதா?, புதிதாக அமைக்கப்பட்டு வரும் சாலைகளின் மட்டம்சரியான முறையில் இருக்கிறதாஎன்பன உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து ஆய்வின்போது கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, தாம்பரம் ஆணையர் இளங்கோவன், பொறியாளர்கள் ஆனந்த ஜோதி, டெப்சி ஞானலதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.