கூட்டணியில் சேர்க்காமல் திமுகவும் அதிமுகவும் ஒதுக்கிவிட்டதால் அந்தரத்தில் விடப்பட்டுள்ளார் நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக். இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது: கடந்த 2 மாதங்களாக எங்களை காக்கவைத்து வேறு எங்கும் போகவிடாமல் முடக்கி வைத்து ஏமாற்றிவிட்டது திமுக. போனால் போகட்டும் ஒரு தொகுதி வேண்டுமானால் கொடுக்கலாம். அதையும் பிறகு யோசிக்கலாம் என்றெல்லாம் அந்தத் தரப்பில் எங்களை இளக்காரமாக பேசி இருக்கிறார்கள்.
அதிமுகவினரோ முதலில் ஆதரவு கடிதம் தரவேண்டும் என்றனர். ஏற்கெனவே ஆதரவு கடிதம் கொடுத்த கட்சிகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டனர். அதுபோன்ற நிலைமை எங்களுக்கும் வந்துவிடக்கூடாது என்பதால்தான் அதிமுகவிடம் ஆதரவு கடிதம் கொடுக்கவில்லை. இனிமேல் நாங்கள் யாருக்காகவும் காத்திருக்க முடியாது. அனைவரையும் ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்கத் திட்டமிடுகிறோம். இது தொடர்பாக இளைஞர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் சென்னை வடபழனியில் சனிக்கிழமை (நாளை) ஆலோசிக்க உள்ளேன். இவ்வாறு கார்த்திக் கூறினார்.