வாக்குப்பதிவின்போது கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி பெறவும், வாக்குச் சாவடிகளில் கூடுதல் முகவர்களை அமர்த்தவும் சில அரசியல் கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்களை வேட்புமனு தாக் கல் செய்ய வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் முடிந்துள்ள நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் அதிக அளவில் மனுதாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பாக, அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் கூறும்போது, ‘‘வாக்குச் சாவடிகளுக்குள் சென்று, வாக்குப் பதிவை பார்வையிடுவதற்கான அனுமதி சுயேச்சை வேட்பாளர்களுக்கு கிடைக்கும். சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்துவதன் மூலம், அவர்கள் பெயரில் வாக்குச் சாவடிகளிலும், வாக்கு எண்ணும் மையங்களிலும் பிரதான கட்சியினரை முகவர்களாக நியமிப்பார்கள். வேட்பாளரின் செலவு, நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஆகாமல் இருக்க, சில கணக்குகளை சுயேச்சை வேட்பாளரின் கணக்கில் காட்டவும் வசதியாக இருக்கும். அதற்காகவே, சில அரசியல் கட்சிகள் சுயேச்சை வேட்பாளர்களை நிறுத்துகின்றன” என்றார்.
இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தேர்தல் விதிகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் கடிதம் இருந்தால், மனுதாக்கல் செய்பவர் சம்மந்தப்பட்ட கட்சியின் வேட்பாளராக அங்கீகரிக்கப்படுவார்.
கட்சியின் கடிதம் இல்லாவிட்டால் அவர் சுயேச்சை வேட்பாளராக அங்கீகரிக்கப்படுவார். ஒரு கட்சியில் இருப்பவர் சுயேச்சையாக போட்டியிடலாம். அதை முறைகேடாக பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் தான் விதிகளை வகுத்து தடுக்க வேண்டும். இப்போது உள்ள விதிகளின்படி தடுக்க முடியாது” என்றார்.