திருச்செந்தூர் கோயில் கடற்கரை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
தமிழகம்

கரோனா பரவல் கட்டுப்பாடுகளால் களையிழந்த சுற்றுலா தலங்கள்

செய்திப்பிரிவு

கரோனா பரவலை கட்டுப்படுத்தவிதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் வருகையின்றி சுற்றுலா தலங்கள் களையிழந்து காணப்பட்டன.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மறுநாளை தென்மாவட்ட மக்கள் காணும் பொங்கல்தினமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் பொதுமக்கள் குடும்பத்தோடு மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கடற்கரை பகுதிகள், பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால், இந்தாண்டு கரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும், வழிபாட்டுத் தலங்களிலும் கடந்த 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு மறுநாளான நேற்று கோவில்பட்டி அருகே குருமலை அய்யனார் கோயில் மற்றும்குருமலை காப்புக்காட்டு பகுதிக்குமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி தலைமையிலான போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால், பொதுமக்கள் மலைப்பாதையிலேயே திருப்பி அனுப்பப்பட்டனர். கழுகுமலை மலை மீதுள்ளவெட்டுவான் கோயில், சமணர் சிற்பங்களை பார்க்கவும் அனுமதிமறுக்கப்பட்டது. கிரிவலப்பாதையில் உள்ள மரநிழலில் மக்கள் ஆங்காங்கே அமர்ந்திருந்தனர்.

பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை நுழைவாயில் அடைக்கப்பட்டிருந்தது. காணும் பொங்கலை முன்னிட்டு நடைபெறும் கலைநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டிருந்தன. இங்கு வந்த திருநெல்வேலி, சங்கரன்கோவில், ராஜபாளையம், தூத்துக்குடி உள்ளிட்டபகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். அவர்கள் கோட்டைக்கு வெளியே பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் சிறிது நேரம் விளையாடி விட்டுச்சென்றனர்.

விளாத்திகுளம் வைப்பாற்றில் காணும் பொங்கலுக்கு மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தி இருந்தனர். அதன்படி நேற்று ஆற்றங்கரைக்கு வந்த மக்களை போலீஸார்தடுத்து நிறுத்தி திரும்ப அனுப்பினர். இந்தாண்டு ஆற்றில் தண்ணீர்ஓடும் நிலையில், காணும் பொங்கலை கொண்டாட அனுமதிக்காதது பொதுமக்களிடையே ஏமாற் றத்தை தந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி வடக்கு கடற்கரைசாலையில் உள்ள முத்துநகர், துறைமுகத்தை ஒட்டி அமைந்துள்ள முயல் தீவு, துறைமுக கடற்கரை, ரோச் பூங்கா ஆகிய கடற்கரை பகுதிகளிலும், ராஜாஜி பூங்கா, நேரு பூங்கா, சிதம்பரநகர் எம்.ஜி.ஆர். பூங்கா, வி.வி.டி.பூங்கா, சங்கரநாராயணன் பூங்காஉள்ளிட்ட அனைத்து பூங்காக்களிலும் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு மக்கள் வருதற்கு அனுமதி மறுத்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இதுபோல், மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், மணப்பாடு கடற்கரையிலும் மக்கள் கூட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில், தேரிக்காடு, தாமிரபரணி கரையோர பகுதிகள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டமில்லாமல் களையிழந்து காணப்பட்டது.பொங்கல் விளையாட்டுபோட்டிகளும் தடை செய்யப்பட்டதால், மாவட்டத்தில் எங்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வில்லை.

SCROLL FOR NEXT