தமிழகம்

மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகையில் விநாடிக்கு 1500 கனஅடி நீர் திறப்பு

செய்திப்பிரிவு

மதுரை சித்திரை திருவிழாவுக்காக நேற்று வைகை அணையில் இருந்து விநாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

தேனி மாவட்டத்தில் மழை இல்லாமல் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்து வருகிறது. இதனால் அணையில் நீரைத் தேக்குவதற்காக பெரியாறு அணையில் இருந்து கடந்த 3 நாட்களாக விநாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக வைகை அணையில் இருந்து 3 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. முதல் நாளான நேற்று காலை 8 மணி முதல் விநாடிக்கு 1500 கனஅடியும், மதுரை மாவட்ட குடிநீருக்காக 60 கனஅடியும் என மொத்தம் 1560 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இது குறித்து ‘தி இந்து’விடம் வைகை அணை செயற்பொறியாளர் குபேந்திரன் நேற்று கூறியது: முதல்நாள் 1500 கனஅடியும், இரண்டாவது நாள் 850 கனஅடியும், மூன்றாவது நாள் 300 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு 21-ம் தேதி காலை 8 மணிக்கு தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்படும். குடிநீருக்காக மட்டும் 60 கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்றார்.

அணைகள் நீர்மட்டம்

பெரியாறு (152) நீர்மட்டம் 110.60அடி, நீர்வரத்து16 கனஅடி, வெளியேற்றம் 200 கனஅடி, வைகை அணை (71) நீர்மட்டம் 35.83 அடி, நீர்வரத்து 124 கனஅடி, வெளியேற்றம் 1560 கனஅடி, மஞ்சளாறு (57) நீர்மட்டம் 33.50 அடி, நீர்வரத்து இல்லை. வெளியேற்றம் இல்லை, சோத்துப்பாறை (126.28) நீர்மட்டம் 90.85, நீர்வரத்து இல்லை. வெளியேற்றம் 3 கனஅடி.

SCROLL FOR NEXT