கரோனா பரவல் காரணமாக நாளை (ஜன.17) முதல் வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வனத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர் 17.01.2022 (நாளை) முதல் 31.01.2022 வரை பொதுமக்களுக்கு மூடப்படுகிறது. 31.01.2022 அன்று நிலைமையை மதிப்பாய்வு செய்து, அதற்கேற்ப முடிவு எடுத்து பின்னர் அறிவிக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 23,989 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 29,15,948. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 6,34,793 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,47,974 .
இந்நிலையில், பாதுகாப்பு கருத்து வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.