புதுச்சேரி: புதுச்சேரியில் இதுவரை 30 மருத்துவர்கள், 50 சுகாதாரப் பணியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்து வருகிறது. இச்சூழ்நிலையில் கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மீண்டும் கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளதாகவும், கரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு அங்கு செல்ல வேண்டும் என்றும் சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று பரவி வருகிறது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு கூறியதாவது:
"கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது என்ற தகவல் வதந்தி. இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி கரோனா மருத்துவமனையாக மாற்றப்படவில்லை.
கோரிமேட்டில் உள்ள அரசு மார்பு நோய் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக 180 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்போது அங்கு 36 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 160 படுக்கைகளுடன் தனியாக கோவிட் வார்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அரசு பொது மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைப் பிரிவுகளும் தொடர்ந்து இயங்கி வருகின்றன. தற்போதைய சூழலில் ஏராளமான படுக்கைகள் காலியாகவே உள்ளன. இந்தப் படுக்கைகள் நிரம்புவதைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் கரோனா ஒமைக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால் தினசரி தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதுவரை 30 மருத்துவர்கள், 50 சுகாதாரப் பணியாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு குறிப்பிடும்படி உடல்நல பாதிப்பு இல்லை என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. அனைவரும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும். இவற்றைக் கட்டாயம் கடைப்பிடித்தால் தொற்று வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்."
இவ்வாறு சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்தார்.