சென்னை: பொங்கல் திருநாளில் முதல்வரின் தந்தையும் தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி உருவபடத்திற்கு ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டின் தனிப்பெரும் விழாவாக பொங்கல் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் திருநாளை கொண்டாட சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிப் பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பொங்கல் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ''''பொங்கலோ பொங்கல்" என்று சொல்லும்போதே மக்கள் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது. புத்துணர்வு பொங்கி வழிகிறது. உள்ளமெல்லாம் பூரிப்பு பிறக்கிறது. அந்த வகையில் நம் ஊனோடு, உயிரோடு, உணர்வோடு கலந்த விழாவாக தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அமைந்துள்ளது. தை முதல் நாள் தமிழர் திருநாள், தை இரண்டாம் நாள் வான்புகழ் கொண்ட திருவள்ளுவர் நாள் எனத் தைத்திங்களின் தொடக்கம் என்பது தமிழர் பெருவிழா நாட்களாக அமைந்துள்ளது. கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, இல்லத்தில் இருந்தபடியே பொங்கலை கொண்டாடுங்கள், பொது இடங்களில் கூட வேண்டாம்'' என முதல்வர் ஸ்டாலின் அறிவுரையுடன் கூடிய பொங்கல் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) 14.1.2022, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் தமிழகத்தில் ஐந்து முறை முதல்வராகத் திகழ்ந்த தனது தந்தை கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதல்வர் ஸ்டாலின், பொதுநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான அலுவல்களுக்கிடையே பங்கேற்கும் காட்சிகளில் தோன்றியபோது வழக்கமாக வெண்ணிற சட்டை அணிந்து காணப்படுவார்.
ஆனால் இந்நிகழ்வின்போது முதல்வர் கருநீல வண்ணத்தில் வெண்ணிற கோடுகளுடன் கூடிய சட்டையையும் வேட்டியையும் அணிந்திருந்தது, தந்தைக்கு மகன் மரியாதை என்ற வகையில் எந்தவித அரசியல் கலப்புமில்லாத பண்டிகை தினங்களுக்கே உண்டான ஒரு பாசமும் நெகிழ்வுமிக்க ஒரு நிகழ்வாக இது அமைந்ததைப்போலிருந்தது.
முதல்வர் தனது தந்தை கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது முதல்வரின் மனைவி துர்காவும் அருகில் இருந்தார். துர்காவும் கருணாநிதி திருவுருவப் படத்தை வணங்கினார்.