தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
தமிழகத்தில் கரோனா பரவல்மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி நேற்று பூஸ்டர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
தடுப்பூசி போட்ட பிறகு சுமார்20 நிமிடங்கள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர்கள் இருந்தனர். பிறகு, மருத்துவர்களின் ஒப்புதலுடன் ஆளுநரும், அவரது மனைவியும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு திரும்பினர்.