தமிழகம்

நடிகை விஜயலட்சுமி விவகாரம்; சிறையில் உள்ள ஹரி நாடாரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும்: பெங்களூரு போலீஸாருக்கு சென்னை போலீஸார் கடிதம்

செய்திப்பிரிவு

பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சென்னை திருவான்மியூர் போலீஸார், பெங்களூரு போலீஸாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

‘ஃப்ரெண்ட்ஸ்’ படம் மூலம்பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. இவர், தமிழ், தெலுங்கு,கன்னடம், மலையாளப் படங்களில் நடித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டதாக தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வந்தார். இந்நிலையில், சீமானின் தொந்தரவு தாங்க முடியவில்லை என்று கூறி, முகநூலில் வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி, 2020 ஜூலையில் மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமியிடம், எழும்பூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் வாங்கினார்.

மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த விஜயலட்சுமி தர்ணாவில் ஈடுபட்டார். உடல் நலம் சரியாகாத நிலையில் தன்னை மருத்துவமனையில் இருந்து திடீரென வெளியேற்றி விட்டதாகவும், சீமானுக்காக ஹரிநாடார் தன்னை மிரட்டுவதாகவும், சீமான், ஹரி நாடாரை கைது செய்ய வேண்டும் எனவும் விஜயலட்சுமி வலியுறுத்தினார். இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக, திருவான்மியூர் போலீஸார் தற்போது மீண்டும் விசாரணையில் இறங்கியுள்ளனர். வழக்கு ஒன்றில் கைதாகி,பெங்களூரு சிறையில் உள்ள ஹரி நாடாரை, விஜயலட்சுமி வழக்கில் கைது செய்ய அனுமதிக்கக் கோரி, பெங்களூரு போலீஸாருக்கு திருவான்மியூர் ஆய்வாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT