தமிழகம்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

செய்திப்பிரிவு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பெருமாள் பரமபதவாசல் வழியாக வந்து, நம்மாழ்வாருக்கு காட்சியளித்தார்.

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில், முக்கிய நிகழ்வான வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து, இராப்பத்து என மொத்தம் 21 நாட்கள் நடைபெற்று வருகிறது.

இக்கோயிலில் கடந்த 3-ம்தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. அன்று முதல் பகல் பத்து நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் பெருமாள் வெவ்வேறு அலங்காரத்துடன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகல் பத்தின் கடைசி நாள் புதன்கிழமையுடன் முடிவடைந்து, நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது பெருமாள் பரமபதவாசல் வழியாக எழுந்தருளி, சடகோபன் எனும் நம்மாழ்வாருக்கு எதிர்சேவையில் காட்சி தந்தார். இரவு நேர ஊரடங்கு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனினும், காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பரமபதவாசல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT