தாம்பரம் மாநகராட்சியின் முதல்மேயர் பதவிக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில், பெண் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விரைவில் அரசிதழில் அறிவிப்பு வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்துப் பணிகளும் தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செய்கின்றன. வார்டு வரையறை செய்தல், வாக்காளர் பட்டியல் வெளியீடு, இட ஒதுக்கீடு, ஆண் - பெண் வார்டு பிரித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சியினரும் வேகம்காட்டி வருகிறார்கள். திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனித்தனியே தங்களது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உருவாக்கப்பட்டுள்ள 70 வார்டுகளில் 50 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் அனைத்து மேயர் பதவிகளிலும் பெண்களுக்கு50 சதவீதம் ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில்தாம்பரம் மாநகராட்சி பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில், மேயர் பதவி ஆதிதிராவிட பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தாம்பரம் மாநகராட்சியில் 1, 3, 4, 6, 9, 12, 13, 14, 15, 16, 18, 19, 21, 23, 24, 25, 27, 28, 29, 31, 32, 34,35, 36, 37, 38, 39, 41, 42, 51, 57, 58, 59, 60, 66, 68 போன்ற வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தவார்டுகளை திமுகவினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே எந்தெந்த வார்டுகள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ள அரசியல் கட்சியினர் ஆர்வமாக உள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஒவ்வொரு வார்டிலும் 2011-ம்ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலும் 2019-ம் ஆண்டு வீடுகளின்எண்ணிக்கை அடிப்படையிலும் வார்டுகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. மேலும், வார்டுகளில் மக்கள் தொகை அடிப்படையில் அதிகமாகப் பெண்களின் எண்ணிக்கை இருக்கும்பட்சத்தில் அந்த வார்டுபெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
விரைவில் இதற்கான இட ஒதுக்கீடு, பெண்கள் வார்டு உள்ளிட்ட அனைத்தும் அரசிதழில் தகவல் வெளியாகும்” என்றார்.