தேமுதிக - ம.ந.கூட்டணி - தமாகா அணியில் தமிழர் முன்னேற்றப் படை, தமிழ்ப்புலிகள் அமைப்பு ஆகியவை இணைந்துள்ளன. இந்த 2 அமைப்புகளுக்கும் மதிமுகவின் கோட்டாவில் இருந்து தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, பல்லாவரம் தொகுதி யில் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் கி.வீரலெட்சுமியும், தாராபுரம் (தனி) தொகுதியில் நாகை திருவள்ளுவனும் போட்டியிடுகின்றனர். இதற்கான அறிவிப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். இவர்கள் இருவரும் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
பல்லாவரம் தொகுதி வேட் பாளரான வீரலட்சுமி ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘‘பல்லாவரத்தில் எங்கள் அமைப்பின் கட்டமைப்பு வலுவாக உள்ளது. தேமுதிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமாகா, விசிக ஆகிய கூட்டணி கட்சிகளும் அந்தப் பகுதியில் வலுவாக உள்ளன. எனவே, நிச்சயம் வெற்றி பெறுவேன். பல்லாவரம் நகராட்சியில் நிறைய ஊழல்கள் நடந்துள்ளன. இது தொடர்பான விவரத்தை ஏற்கெனவே வெளியிட்டேன். எனவே, அப்பகுதி மக்கள் நிச்சயம் என்னை வெற்றி பெறச் செய்வர்’’ என்றார்.