சென்னை: ‘தமிழால் இணைவோம்’ என்று தலைமைச்செயலகத்தில் இணையதளம் வழி நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கமிட்டார்.
‘தமிழால் இணைவோம்’ என்ற முழக்கத்தை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் கடந்த 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நாள் முதலே தனதுகோஷமாக அறிவித்து, இன்றளவும் முதல் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் அறிந்த வாசகர்களை ஒரு குடையின்கீழ் கொண்டு வருவதை தனது முக்கிய இலக்காகக் கொண்டிருப்பதையே இந்த கோஷத்தின் வழியாக ‘இந்து தமிழ்' நாளிதழ் உறுதி செய்கிறது.
இந்நிலையில், ‘தமிழால் இணைவோம்’ என்ற அதே கோஷத்தை முதல்வர் வாயிலாக தமிழக அரசும்வெளியிட்டிருப்பது, நமது வாசகர்களுக்கு கிடைத்த பெருமையாகும்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இணையவழியில் நேற்று நடந்த அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
‘தமிழால் இணைவோம்’ என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழுக்குத்தான் அந்த வலிமை உள்ளது. மத மாயங்கள், சாதிச் சழக்குகளை வீழ்த்தும் வலிமை மொழிக்குத்தான் உள்ளது.அதனால்தான், ‘தமிழால் இணைவோம்’ என்பதை நமது முழக்கமாக கொண்டுள்ளோம்.
உலகின் பல நாடுகளில் இருந்துதமிழன் என்ற உணர்வுடன் ஒன்றாக கூடியுள்ளோம். நிலங்கள் நம்மை பிரித்தாலும் மொழி இணைக்கிறது. திமுக ஆட்சி அமையும் போதெல்லாம், இங்குள்ள தமிழர்களின் ஆட்சியாக மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரந்து வாழும்அனைத்து மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. உங்களில் பலருக்கும் தமிழகத்தில் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழக அரசை நமது அரசு என்று சொல்லிக்கொள்ளும் உரிமை எப்போதும் உண்டு.
உலகில், 30-க்கும் மேற்பட்டநாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். எங்குதமிழர்கள் வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழகம்தான் தாய்வீடு. கடந்த 2011-ம் ஆண்டில் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வெளிநாடு வாழ் தமிழர் நலச்சட்டம் இயற்றப்பட்டது. வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியம் உருவாக்கி, நலத் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால்நலவாரியம் அமைக்கப்படவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ‘வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும் எனஐந்தே மாதத்தில் சட்டப்பேரவையில் அறிவித்தேன்.
அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் 13 பேரைக் கொண்டு வாரியம் அமைக்கப்படும். ரூ.5 கோடியில் வெளிநாடு வாழ்தமிழர் நல நிதி என மாநில அரசின்முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். மூலதன செலவினமாகரூ.1.40 கோடி, தொடர் செலவினமாக, நலத் திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ரூ.3 கோடி ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் என்று அறிவித்தேன். வெளி நாடு வாழ் தமிழர் குறித்த தரவு தளம் ஏற்படுத்தப்படும்.
வெளிநாடு வாழ் தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்விஉதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கப்படும். தமிழர்கள் புலம் பெயரும்போது பயண புத்தாக்கப் பயிற்சி பல்வேறு ஊர்களில் நடத்தப்படும். ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி வசதி,வலைதளம், கைபேசி செயலி அமைப்பதுடன், சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.
தமிழகம் திரும்பியவர்கள் குறுதொழில் செய்ய ஏதுவாக அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கப்படும். இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதுடன், அனைத்துக்கும் சேர்த்து ரூ.20 கோடிஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஆண்டுதோறும் ஜன.12-ம் தேதி ‘உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாளாக’ கொண்டாடப்படும்.
தமிழகத்தில் உள்ள பிளவுகளுக்கு வெளிநாடு சென்ற பின்னரும் முக்கியத்துவம் தராதீர்கள். ஒருதாய் மக்களாக வாழுங்கள். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள். தமிழை, தமிழகத்தை விட்டு விடாதீர்கள். தமிழகத்துக்கு வாருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு தமிழகத்தைக் காட்டுங்கள். அவர்களை அழைத்துவந்து கீழடியை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள். இங்குள்ளதைபோல், அயலகத் தமிழ் மக்களுக்கும் எல்லாமுமாக இந்த அரசு இருக்கும்.
தமிழால் இணைவோம், தமிழைவளர்ப்போம், தமிழரை வளர்ப்போம்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், எம்எல்ஏ டிஆர்பி ராஜா,தலைமைச் செயலர் வெ.இறையன்பு, பொதுத்துறை செயலர் டி.ஜகந்நாதன், மொரீஷியஸ் முன்னாள் அதிபர் பார்லேன் வையாபுரி, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோ பி.கமலநாதன், பப்புவா நியூ கினியா நாட்டைச் சேர்ந்த மாகாண ஆளுநர் சசிதரன் முத்துவேல், மேரிலேண்ட் போக்குவரத்து ஆணையர் ராஜன் நடராஜன், லண்டன் ஹார்லி ஸ்ட்ரீட் ஹெல்த் கேர் இயக்குநர் தனபால் ராமசாமி உள்ளிட்டோர் இணையவழியில் பங்கேற்றனர்.