தமிழகம்

கரோனாவால் இறந்த முன்னாள் எம்.பி. ஏஜிஎஸ் ராம்பாபு உடலுக்கு கட்சியினர் அஞ்சலி: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இரங்கல்

செய்திப்பிரிவு

மதுரை: கரோனாவால் உயிரிழந்த த.மா.கா. முன்னாள் எம்பி ஏஜிஎஸ் ராம்பாபு (60) உடலுக்கு அக்கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

மதுரையில் இருமுறை காங்கிரஸ் சார்பிலும், ஒருமுறை தமாகா சார்பிலும் எம்பியாக இருந்தவர் ஏஜிஎஸ் ராம்பாபு(60). தமாகா தொடங்கியது முதல், அக்கட்சியில் இணைந்து பணியாற்றினார்.

ஜி.கே.வாசன் மத்திய அமைச்சராக இருந்தபோது, கப்பல் போர்டு உறுப்பினராக இருந்தவர். தற்போது கட்சியில் மாநில பொதுச்செயலராக இருந்த அவர், சில நாட்களுக்கு முன்பு உடல்நிலைபாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். அவரது உடல் அஞ்சலிக்காக மதுரை மகால் வடம்போக்கித்தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்தது.

தமாகா நிர்வாகிகளும், பிற அரசியல் கட்சியினரும் அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் செல்லவில்லை

ராம்பாபு மறைவுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட இரங்கல் செய்தி: ராம்பாபுவின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. அவர் ஆற்றிய ஏராளமான பணிகள்தான் இன்று மதுரை தொகுதி பல துறைகளில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

மூப்பனார் தலைமையை ஏற்று காங்கிரஸில் பணியாற்றினார். 1996-ல் மூப்பனார் தலைமையை ஏற்றும், 2014-ல் எனது தலைமையிலும் தமாகாவுக்கு வலு சேர்த்தார். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கும், தமாகாவுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT