பர்கூர் அருகே குழந்தைத் தொழிலாளர் பள்ளி அமைய, தனது நிலத்தை தானமாக வழங்கிய பழங்குடியின விவசாயிக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் புதிய வீடு கட்டித் தரப்பட்டது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரம் பர்கூர் மலைப்பகுதியில் கொங்கடை கிராமம் உள்ளது. இங்குள்ள எஸ்டி காலனியில், 2010-ம் ஆண்டு தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்பு பள்ளிகளை சுடர் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தொடங்கியது. இப்பள்ளியில் 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்த நிலையில், வகுப்பறைக்கு கட்டிடம் இல்லாததால், மரத்தடியில் வகுப்புகள் நடந்து வந்தன.
இதனைத் தொடர்ந்து, தன்னார்வலர்கள் பலரின் உதவியால், வகுப்பறைக்கு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதற்கான இடம் கிடைக்கவில்லை. அப்பகுதியில் வசித்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ஜடையன் (70) தனது நிலத்தில் பள்ளிக்கு தேவையான நிலத்தை வழங்க தானாக முன்வந்தார்.
அவர் வழங்கிய நிலத்தில் குழந்தைத் தொழிலாளர் பள்ளிக்கான வகுப்பறை கட்டப்பட்டு, அங்கு மாணவர்கள் கல்வி பயிலத் தொடங்கினர்.
ஆனால், பள்ளி வகுப்பறைக்கு நிலம் வழங்கிய ஜடையன், மண் குடிசையில் தொடர்ந்து வசித்து வந்துள்ளதைக் கவனித்த, சுடர் தொண்டு நிறுவனம் மற்றும் தன்னார்வலர்கள் அவருக்கு வீடு கட்டித்தர முடிவு செய்தனர். மாணவர்களின் கல்விக்காக தனது நிலத்தில் வகுப்பறை அமைக்க அனுமதித்த ஜடையனின் தன்னலமற்ற சேவையை போற்றும் வகையில், கொடையாளர்கள் ஒன்றிணைந்து நவீன தொழில் நுட்பத்தில் அவருக்கு வீடு கட்டித் தரும் பணியைத் தொடங்கினர்.
கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில், பிர்சா முண்டா இல்லம் என அதற்கு பெயர் சூட்டப்பட்டது. இந்த இல்லத்தை திமுக துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் நேற்று திறந்து வைத்து, முதியவர் ஜடையனிடம் ஒப்படைத்தார்.
ஈரோடு செங்குந்தர் கல்விக் கழக செயலாளர் எஸ்.சிவானந்தன், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாவட்ட தலைவர் பிவி பாலதண்டாயுதம், சுடர் தொண்டு நிறுவன இயக்குநர்எஸ்.சி.நடராஜ், திரைப்பட இயக்குநர் சதீஷ், தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட இயக்குநர் சுப்பிரமணியன், திட்ட மேலாளர் வேம்பு உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.