சென்னை: கரோனா பொது முடக்கம் மட்டும் அல்லாமல் தொடர்ந்து, பணிகளுக்கு இடையே சாலையோர சிறுமிகளுக்கு போக்குவரத்து காவலர் ஒருவர் கணக்கு பாடம் சொல்லி கொடுத்து வருவது வரவேற்பை பெற்றுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக முழு அளவில் இயங்கவில்லை. இந்நிலையில், சென்னை பாரிமுனையில் சாலையோரத்தில் வசித்து வரும் மாநகராட்சி பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவி தீபிகாவுக்கு, சென்னை பூக்கடை காவல் நிலைய போக்குவரத்து காவலர் மகேந்திரன் கணக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, அவரை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள எரவார் என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்தான் மகேந்திரன். பிஎஸ்சி கணிதம் பட்டப்படிப்பு படித்து விட்டு பி.எட். சென்றுள்ளார். அப்போது, டியூசன் சென்டர் ஒன்றில் வகுப்பு எடுத்துள்ளார். இந்த இடைப்பட்ட காலத்தில்தான் அவருக்கு 2013-ல் காவல் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணி (ஆயுதப்படை) கிடைத்துள்ளது. கடந்த ஒரு ஆண்டாக போக்குவரத்து காவலராக பணியாற்றி வருகிறார்.
எப்போதெல்லால் அவருக்கு ஓய்வு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அருகில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு கணக்கு பாடம் சொல்லி கொடுப்பது, சந்தேகத்தை தீர்த்து வைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். அப்படிதான் சென்னை பாரிமுனையில் உள்ள பிளாட்பாரம் பகுதியில் தீபிகா உட்பட 10 சிறுமிகளுக்கு பாடம் சொல்லி கொடுத்துள்ளார். கரோனா பொது முடக்கத்தின்போது ஏழை சிறுவர், சிறுமிகளுக்கு உணவு, நோட்டு, புத்தகம், பென்சில், பேனா உள்ளிட்டவைகளையும் வாங்கி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து, இந்து தமிழ் திசையிடம் போக்குவரத்து காவலர் மகேந்திரன் கூறும்போது, "வடசென்னை பகுதியில் கடந்த ஓராண்டாக பணிபுரிகிறேன். இங்கு பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்கள் பொது முடக்கத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். தள்ளுவண்டியின் கீழ் பகுதியையே வீடாக கொண்ட பல சிறுவர், சிறுமிகளிடம் பேச்சு கொடுத்தேன். நாளடைவில் குடும்பத்தில் ஒருவர் போல் என்னிடம் பழக ஆரம்பித்தனர். நான் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் அவர்களுக்கு கணக்கு பாடம் சொல்லி கொடுப்பேன். இவர்களுக்கு மட்டும் அல்லாமல் நான் எங்கெல்லாம் செல்கிறேனோ அங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும்போது மாணவ, மாணவிகளுக்கு பாடம் சொல்லி கொடுப்பது வழக்கம். இது எனக்கு மனநிறைவை தருகிறது" என்றார் நெகிழ்ச்சியுடன்.
இதற்கிடையில், மகேந்திரனின் செயலை அறிந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அவரை நேற்று அழைத்து பாராட்டினார்.