திருப்போரூர்: திருப்போரூர் மற்றும் திருக்கழுக்குன்றம் சுற்றுப்புற கோயில்களில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள் மற்றும் பணியாளர்கள் என 209 பேருக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறநிலையத் துறை சார்பில் புத்தாடை மற்றும் சீருடைகளை எம்எல்ஏ பாலாஜி நேற்று வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயில், திருவிடந்தை நித்தியக் கல்யாண பெருமாள், ஸ்தலசயன பெருமாள், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் உள்ளிட்ட அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் பணியாற்றிவரும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள், பல்வேறு நிலை பணியாளர்களுக்கு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைமற்றும் சீருடை வழங்கும் நிகழ்ச்சி, கந்தசுவாமி கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில், சமூக இடைவெளியைப் பின்பற்றி நேற்று நடைபெற்றது.
இதில், திருப்போரூர் தொகுதி எம்எல்ஏ பாலாஜி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சார்யர்கள் மற்றும் பணியாளர்கள் என 209 நபர்களுக்கு அறநிலையத் துறை சார்பில் புத்தாடை மற்றும் சீருடைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் லட்சுமி காந்தன் பாரதிதாசன், செயல் அலுவலர்கள் சக்திவேல், குமரன், ஆய்வர் பாஸ்கரன், திருப்போரூர் ஒன்றியக் குழு தலைவர் இதயவர்மன், மேலாளர் வெற்றிவேல் மற்றும் கோயில் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.