தமிழகம்

நாமக்கல், குமாரபாளையத்தில் 300 கிலோ கஞ்சா பறிமுதல்: கோவை, தேனியைச் சேர்ந்த 7 பேர் கைது

கி.பார்த்திபன்

நாமக்கல்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நாமக்கல், குமாரபாளையம் வழியாக தேனி மற்றும் கோவை மாவட்டத்திற்கு காரில் கஞ்சா கடத்திய 7 பேரை நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 3 கார்கள் மற்றும் ரூ. 1 கோடி மதிப்புள்ள 300 கிலோ கஞ்சாவையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் அருகே சேலம் - கரூர் தேசிய நெடுங்சாலை முதலைப்பட்டி அருகில் நாமக்கல் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சேலத்தில் இருந்து நாமக்கல் நோக்கிச் சென்ற காரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். எனினும், வாகனம் நிற்காமல் சென்றதால் சந்தேகமடைந்த காவல் துறையினர் விரட்டிச் சென்று காரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அதில் காரில் இருந்த மூவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். சந்தேகமடைந்த காவல் துறையினர் காரை சோதனை செய்தபோது அதில் கஞ்சா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்து தெரியவந்தது. தலா ஒரு கிலோ எடை கொண்ட 200 பாக்கெட்டுகள் காரில் இருந்தது. அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் தேனி மாவட்டம் தேவராத்தைச் சேர்ந்த முருகன் (49), ஜெயசந்திரன் (67), முகேஷ் (29) என்பது தெரியவந்தது. மூவரும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து வாங்கிய கஞ்சாவை தேனி மாவட்டத்திற்கு விற்பனைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபோல் குமாரபாளைத்தில் சேலம் - கோவை நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையின்போது ஆந்திராவில் இருந்து கோவைக்கு இரு கார்களில் 100 கிலோ கஞ்சா கடத்திய கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த முருகன் (49), கோவை தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த அப்துல் ஜலீல் (69), முஜிதீப் ரகுமான் (29), சுல்தான் (29) ஆகிய நால்வரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனிடையே, காரில் கடத்தில் வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட 300 கஞ்சா மற்றும் 3 கார்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் உடனடி நடவடிக்கை எடுக்க காவலர்களை பாராட்டினார்.

மேலும், கடத்தல் குறித்து நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் கூறுகையில், ஏற்கெனவே கஞ்சா கடத்தலில் கைது செய்யப்பட்ட நபர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மாவட்டத்தில் தற்போது கஞ்சா கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகன தணிக்கையின் போது தப்பிக்க முயன்றவர்களை காவல்துறையினர் விரட்டிச் செய்து பிடித்தனர். சுமார் ஒரு கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு இருக்கலாம். கைது செய்யப்பட்டவர்களிடம் ஹெராயின் போன்ற வேறு போதை வஸ்துகள் கடத்தல் தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

SCROLL FOR NEXT