சத்தீஸ்கரில் கண்ணி வெடி தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி ஆர்பிஎப்) வீரர் விஜயராஜின் குடும்பத்தினருக்கு திமுக பொருளாளர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவாடா மாவட்டத்தில் கடந்த 30-ம் தேதி, நக்சல்கள் நிகழ்த்திய கண்ணி வெடி தாக்குதலில் சிக்கி 7 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இதில், சென்னை அருகே அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜ்(45) என்ற உதவி சப்- இன்ஸ்பெக்டரும் உயிரிழந்தார். கடந்த 1-ம் தேதி அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், திமுக பொருளாளர் ஸ்டாலின் நேற்று விஜயராஜின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது தாயார் மோகனா பாக்யவதி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அங்கு வைக்கப்பட்டிருந்த விஜயராஜின் உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
அப்போது ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: விஜயராஜின் மறைவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே ஒரு மாபெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு திமுக சார்பிலும், திமுக தலைவர் கருணாநிதி சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.