சென்னை: பழநியில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று காலை தொடங்கியது. முதன்முறையாக பக்தர்கள் பங்கேற்பின்றி கொடியேற்று விழா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
பாத யாத்திரைக்கு புகழ்பெற்ற பழநி தைப்பூசத் திருவிழா இன்று காலை பழநி தண்டாயுதபாணிசுவாமி கோயிலின் உபகோயிலான பெரியநாயகிம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 6.30 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கொடி மண்டபத்தில் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு தீபாரதனை நடந்தது. தொடர்ந்து மயில், சேவல், வேல் உருவம் பொறித்த மஞ்சள் நிறக்கொடி கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.
கொடியேற்றம் நிகழ்ச்சியில் கோயில் அலுவலர்கள் மட்டும் கலந்துகொண்டனர். முதன்முறையாக பழநி தைப்பூச விழா கொடியேற்றம் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
தைப்பூசவிழாவின் ஆறாம் நாளான ஜனவரி 17-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், அன்று இரவு வெள்ளித்தேரோட்டம் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜனவரி 18-ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு நடைபெறுகிறது. பழநி மலைக்கோயில் மற்றும் அதன் உபகோயில்களில் ஜனவரி 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தேரோட்டத்தின்போது கோயில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்க சிறிய தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டு நான்கு ரத வீதிகளில் வலம்வர உள்ளது. நாளை முதல் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்ர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பழநி மலைக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.