விருதுநகர்: விருதுநகரில் 23 ஏக்கரில் ரூ.390.22 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியைக் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைக்கிறார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே அரசு மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020 மார்ச் 1ஆம் தேதி நடைபெற்றது. மத்திய அரசு 60 சதவிகித பங்கு தொகையாக ரூ.195 கோடியும் மாநில அரசு 40 சதவிகித பங்கு தொகையாகரூ.130 கோடியும் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு கூடுதல் செலவினங்களுக்காக மாநில அரசு சார்பில் கூடுதலாக ரூ.55 கோடியும் அளிக்கப்பட்டு மொத்தம் ரூ.390.22 கோடியில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் இன்று மாலை நடக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு சென்னையில் இருந்தபடி தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தலைமை வகிக்கிறார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலை வகித்தார். பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரியை திறந்து வைத்து உரையாற்றுகிறார்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றும் இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள், டீன் சங்குமணி மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள் பலரும் கலந்துகொள்கின்றனர்.