சென்னை: சிங்கப்பூரில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை எவ்வாறு கொண்டாடப்படுகிறது, அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்து இந்திய மரபுடைமை நிலையம் ஜனவரி 8ஆம் தேதி முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பயிற்சிப் பட்டறையை நடத்துகிறது.
இது தொடர்பாக இந்திய மரபுடைமை நிலையம் சார்பில் பிரத்யேக இணையதளப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. "பொங்கலோ பொங்கல்" எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தப் பக்கத்தில், பொங்கல் குறித்து பல்வேறு தகவல்கள் எளிமையான முறையில் விளக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்தத் தளத்தில் பொங்கல் என்றால் என்ன? எனும் தலைப்பின் கீழ் பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் மற்றும் பெயர்க் காரணம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பொங்கு என்ற சொல்லில் இருந்து பொங்கல் என்ற சொல் உருவானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகரச் சூழலில் பொங்கல் என்ற தலைப்பின் கீழ், சிங்கப்பூரில் பொங்கலுக்கு, தீபாவளியைப் போல பொது விடுமுறை நாள் இல்லை என்றும், நன்றி காட்டும் பண்டிகையாக இன்றுவரை அங்கு பரவலாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லிட்டில் இந்தியா முழுவதும் கோலாகலமாகக் காட்சியளிக்கும் அன்றைய தினத்தில், இந்திய மரபுடைமை நிலையம், லிட்டில் இந்தியா மரபுடைமை மற்றும் வணிகர்கள் சங்கத்துடன் இணைந்து, பொங்கல் திருவிழாவைக் கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாரம்பரிய இந்திய கிராமிய நடனங்கள் என்ற தலைப்பின் கீழ், மயிலாட்டம், கரகாட்டம், கோலாட்டம் மற்றும் பொய்கைக்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட நடனங்கள் குறித்து எளிய முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், பானைக்குள் என்ன இருக்கிறது என்ற தலைப்பின் கீழ், பொங்கல் பானையில் இடம்பெறும் அரிசி, வெல்லம் குறித்த தகவல்களுடன், சிங்கப்பூரில் சமைக்கப்படும் சர்க்கரை மற்றும் வெண் பொங்கல் குறித்த குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன.
மேலும் கைவினைக் கலைகளுடன் பொங்கலை வீடுகளில் கொண்டாடுங்கள் எனும் தலைப்பில் புள்ளிக் கோலங்களுக்கான மாதிரி வடிவங்களும், வண்ணம் தீட்டும் தாளும் கொடுக்கப்பட்டுளளன. இவற்றுடன் இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.