திருச்சி பொன்மலை பணிமனை வாயிலில் நேற்று எஸ்ஆர்எம்யு நடத்திய ஆர்ப்பாட்ட களத்தையும் தனது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார் திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி ரயில் நிலையம், பொன்மலை பணிமனை, ரயில்வே பயிற்சி மையம், கல்லுக்குழி மற்றும் பொன்மலை குடியிருப்புப் பகுதிகளுக்கு, கடந்த சில நாட்களாக மிகவும் கலங்கலாக தண்ணீர் விநியோகிக்கப்படுவதைக் கண்டித்து, எஸ்ஆர்எம்யு துணைப் பொதுச் செயலாளர் எஸ்.வீரசேகரன் தலைமையில் பொன்மலை பணிமனை முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவலறிந்து வந்த அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
முன்னதாக, ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு தனது சித்தப்பா அன்பில் பெரியசாமி, முன்னாள் எம்எல்ஏ கே.என்.சேகரன் ஆகியோருடன் வந்த திருவெறும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் மகேஷ் பொய்யாமொழி, “இன்னும் ஒரு மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், இப்பகுதியின் குடிநீர் பிரச்சினைக்கு முதலில் தீர்வு ஏற்படுத்துவேன்” என்றார்.