சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில்,தமிழக முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் சார்பில்மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘‘10-ம் வகுப்புபொதுத்தேர்வில், மொழித்தேர்வில் தமிழ் மட்டுமல்லாது, மொழி சிறுபான்மை மாணவர்கள், தங்களது தாய்மொழி பாடத்தையும் சேர்க்கக் கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இது அரசின் கொள்கை முடிவு என்பதால், இதுதொடர்பாக தமிழக அரசு2 மாதங்களில் ஆய்வு செய்து உரியமுடிவை எடுக்க வேண்டும் என2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.
பிற மாநிலங்களில் உருதுமொழிப் பாடமாக சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் இவ்வாறுசெய்யாவிட்டால் சிறுபான்மையினரின் மொழி கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துவிடும். எனவே 10-ம்வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மொழி பாடத்துடன், சிறுபான்மை மொழிகளையும் கட்டாயமாக்கும் வகையில் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், சிறுபான்மை மொழி பாடத்தில் தேர்வு எழுத இந்தாண்டு (2022)மார்ச் வரை அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரி விக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘2017-ம் ஆண்டு உயர் நீதிமன்றம்பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்றால், அதுதொடர்பாகநீதிமன்ற அவமதிப்பு வழக்குதான் தொடர வேண்டுமே தவிர, அதையே காரணமாகக் கூறி அடுத்தடுத்து வழக்குகள் தொடர முடியாது. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல’’ எனக் கூறி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.