திருச்சி: அரசு வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.4 லட்சம் மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது மத்திய மண்டல ஐ.ஜி.யிடம் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள கீழகுமரேசபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருண்பிரசாத். இவரது மனைவி மார்க்ரெட் ஜெனிபர் (33). நர்சிங் படித்துள்ளார். இந்நிலையில் தனக்கு அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.4 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக ஜெனிபர் அளித்த புகாரின்பேரில், அதிமுக நிர்வாகிகளான கிருஷ்ண சமுத்திரத்தைச் சேர்ந்த லாசர், தேனீர்பட்டியைச் சேர்ந்த வீரமலை, சூரியூரைச் சேர்ந்த சுப்பிரமணி ஆகியோர் மீது சில மாதங்களுக்கு முன் துவாக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் லாசர் மட்டும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜெனிபர் நேற்று மத்திய மண்டல ஐ.ஜி பாலகிருஷ்ணனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதுகுறித்து ஜெனிபர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘லாசர் உள்ளிட்ட 3 பேரும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தைக் காட்டித்தான் என்னிடம் பணம் கேட்டனர். அதைக் கொடுத்ததும், திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தற்காலிகமாக வேலை வாங்கிக் கொடுத்து ஏமாற்றிவிட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 2 பேரை கைது செய்ய வேண்டும். எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் தொடர்பு இருப்பதால், வழக்கில் அவரையும் சேர்த்து அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இம்மனு குறித்து விசாரணைநடத்த திருச்சி மாவட்ட போலீஸாருக்கு ஐ.ஜி பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.