புதுச்சேரி: புதுச்சேரியில் நடப்பதாக இருந்த தேசிய இளையோர் விழாவை, கரோனா பரவலால் காணொலியில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். அத்துடன் ரூ.23 கோடியில் புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு மற்றும் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளையொட்டி 25-வது தேசிய இளையோர் விழா, அரவிந்தரின் 150-வது பிறந்தநாள் விழா புதுவையில் கொண்டாடப்படுகிறது. இன்று தொடங்கி வரும்16-ம் தேதி வரை நடத்தவிருந்த இந்த தேசிய இளையோர் விழாவில் நாடு முழுவதும் இருந்து 7,500 மாணவர்கள் பங்கேற்பதாக இருந்தது.
விழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி புதுவைக்கு வருகை தர இருந்தார். மீண்டும் கரோனா பரவல் அதிகரித்ததால் பிரதமர் வருகை ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில் தேசிய இளையோர் விழாவை காணொலியில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் காணொலி வாயிலாக விழாவில் பங்கேற்கின்றனர்.
பிரதமர் மோடி இன்று காலை 11 மணிக்கு தேசிய இளையோர் விழாவை காணொலி வாயிலாக டெல்லியில் இருந்தபடி தொடங்கி வைக்கிறார். இந்த விழாவை இணையத்தில் காணலாம்.புதுச்சேரியில் நிகழ்வு நடைபெறும் தனியார் ஹோட்டலிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய் சரவணன்குமார், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்கின்றனர்.
மேலும், இவ்விழாவில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் சார்பில் புதுவையில் ரூ.122 கோடி முதலீட்டில் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுஉள்ள தொழில்நுட்ப மையத்தையும், கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.23 கோடியில் அமைக்கப்பட்டுள்ள காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இதுதொடர்பாக ஆளுநர் தமிழிசை கூறியதாவது: தேசிய இளையோர் விழாவை பிரதமர் நேரில் வந்து தொடங்கி வைப்பதாக இருந்தது. இப்போது காணொலி காட்சி மூலம் விழாவை தொடங்கி வைக்கிறார். இணைய நிகழ்வில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்க வேண்டும். இதற்காக பிரதமர், மத்திய விளையாட்டு அமைச்சர் மற்றும் எனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள விழா இணைய இணைப்பில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.