சென்னை: பொங்கல் பண்டிகைக்கு இரு தினங்களே உள்ள நிலையில், சென்னை கோயம்பேடு சந்தைக்கு கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவை வரத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறியதாவது:
மதுரை, தஞ்சாவூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 100 வாகனங்களில் கரும்பு கட்டுகள் கோயம்பேடு சந்தைக்கு வந்துள்ளன. ஒரு கட்டு ரூ.300-ல் இருந்து ரூ.500 வரை விற்கப்பட்டு வருகிறது.
மஞ்சள் கொத்து ரூ.60-ல் இருந்து ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இன்று மஞ்சள் கொத்து 200 வாகனங்கள், இஞ்சி கொத்து 15 வாகனங்கள், கரும்பு 200-ல் இருந்து 250 வாகனங்கள் வரை வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
கரோனா காரணமாக கடந்த ஆண்டு பொங்கல் விற்பனை பெரிதாக நடைபெறவில்லை. எனவே, இந்த ஆண்டிலாவது விற்பனை சிறப்பாக இருக்கும் என்று நினைத்திருந்தோம். ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை. இதனால், முதலீடு செய்த பணத்தையாவது எடுக்க முடியுமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.