சென்னை: தமிழக அரசு சுற்றுக்கு அனுப்பி உள்ள பெண்களுக்கான நகல்கொள்கை மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைகளை, கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் மற்றும் துறைசெயலருக்கு கடிதமாக அனுப்பிஉள்ளார். அதன் விவரம்:
தமிழகப் பெண்களுக்கான நகல் கொள்கை குறிப்பில் பல்வேறு வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் அரசின் அறிவிப்பாக நின்றுவிடாமல் சட்டரீதியாக்கப்பட வேண்டும். பாலியல் வழக்குகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிப்பதற்கான விதிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
அமலாக்கம் என்று வரும்போது சமூக, பொருளாதார, அரசியல், உளவியல் தளங்கள் குறிப்பிடப்படுகின்றன. இதில், பண்பாட்டுத் தளத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் குறித்த ஆணாதிக்க மற்றும் பிற்போக்கு கண்ணோட்டம் சார்ந்த சடங்குகள், சம்பிரதாயங்கள் விரவிக் கிடக்கின்ற சூழல் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
தேசிய சராசரியைவிட குறைவான பாலின விகிதாச்சாரம் நிலவுவதை மறுக்க முடியாது. இதை உயர்த்துவதற்கான சரியான திசைவழி, கொள்கையின் முக்கிய பகுதியாக அமைய வேண்டும். பட்டியலின, பழங்குடியின பெண்களுக்கான திட்டங்கள், நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். நிலமற்றோருக்கு நில விநியோகம், அதிலும் குறிப்பாக பெண்கள் பெயரில் நில விநியோகம் என்பது அரசின் நிகழ்ச்சி நிரலில் மீண்டும் இடம்பெற வேண்டும்.
கல்விக்கூடங்கள், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட வன்முறைகள் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பெண்கள் பிரச்சினைகளை கையாளும் அதிகாரிகளின் அணுகுமுறை குறித்து ஆண்டுக்கு ஒருமுறை பாலின நிகர்நிலை தணிக்கை மேற்கொள்ள வேண்டும். இணையதளக் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு போதுமான முக்கியத்துவம் கொள்கைக் குறிப்பில் கொடுக்கப்படவில்லை.
சம வேலைக்கு சம ஊதியம்சட்டத்தை அனைத்துத் துறைகளிலும் அமல்படுத்த வேண்டும். பல்வேறு அரசியல் கட்சிகள், பெண்கள் அமைப்புகள், ஜனநாயக இயக்கங்கள், தனிநபர்கள் சார்பில் வரும் கருத்துகளை பொருத்தமான முறையில்இணைத்துக் கொண்டு இக்கொள்கையை செழுமைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.