பொங்கலை முன்னிட்டு புதுச்சேரி மரப்பாலம் சிக்னல் அருகே அரியாங்குப்பம் தொகுதி திமுக சார்பில் வாழ்த்து பேனர் அமைக்கப்பட்டு இருந்தது. இதனை பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலை துறையினர் கிழித்து அகற்றியதாக தெரிகிறது. இதையறிந்த அரியாங்குப்பம் தொகுதி திமுக நிர்வாகிகள் நேற்று மாநில பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமையில் மரப்பாலம் சிக்னலில் திரண்டு, சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி யில் கடும் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.
தகவலறிந்து அங்கு வந்த முதலியார்பேட்டை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போலீஸாரின் வேண்டுகோளை ஏற்றும், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அழைப்பை ஏற்றும் மறியல் போராட்டத்தை கைவிட்டு திமுகவினர் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து, பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகம் சென்ற அவர்கள் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மழைக்காலம் முடிந்து இன்று வரை பிரதான சாலைகளை சீரமைக்காததோடு மரப்பாலம் பகுதியில் ஆளுங்கட்சி பேனர்கள் பெரிய அளவில் இருக்கும்போது, திமுக பொங்கல் வாழ்த்து பேனரை மட்டும் கிழித்து அகற்றியது ஏன்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு அதிகாரிகள் பாரபட்சமாக நடந்து கொண்ட அவர்களின் பணியாளர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதிய ளித்தனர். இதன் பின்னர் திமுக வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.