தமிழகம்

போகி பண்டிகைக்கு மீனம்பாக்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பழைய பொருட்களை எரிக்காதீர்: சென்னை விமான நிலையம் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சென்னை: பொங்கல் பண்டிகையின் முதல் திருவிழாவாக போகி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், மீனம்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பழைய பொருட்களை தீயிட்டு எரிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு சென்னை விமான நிலைய அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை விமான நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கடந்த 2018-ஆம் ஆண்டு போகிப் பண்டிகையின்போது எழுந்த புகை மூட்டம் காரணமாக சென்னை விமான நிலைய ஓடுதளம் தெரியாத அளவிற்கு புகை பரவியதால், 118 விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை பாதிக்கப்பட்டு விமானப் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளானார்கள்.

எனினும் 2019, 2020 & 2021-ஆம் ஆண்டுகளில் சென்னை விமான நிலைய நிர்வாகம் மேற்கொண்ட வழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக போகிப் பண்டிகையால் ஏற்படும் புகை மூட்டப் பாதிப்பு குறைந்திருக்கிறது. மேலும், போகிப் பண்டிகையின்போது விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்கள், பழைய பொருட்களை தீயிட்டு எரிப்பதைத் தவிருங்கள்.

இது போன்று பழைய பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகைமூட்டம் விமான நிலைய ஓடுதள புலப்பாட்டை பாதிப்பதோடு பயணிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், பொதுமக்கள் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம்” என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT