படம்: அசோக் . ஆர் 
தமிழகம்

பிளாஸ்டிக்குக்கு எதிரான விழிப்புணர்வு : மதுரையில் பிரபலமாகும் மஞ்சள் பை பரோட்டா

செய்திப்பிரிவு

மதுரை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் முயற்சிகளில் ஒன்றாக பிளாஸ்டிக் ஒழிப்பைக் கையில் எடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

பிளாஸ்டிக் பைக்கு மாற்றாகத் துணிப் பையைப் பயன்படுத்த ஊக்கப்படுத்தும் வகையில் ‘மஞ்சப் பை இயக்கம்’ திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து மஞ்சள் பை குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்கள் பலரும் கையில் எடுத்துள்ளனர்.

திருச்செந்தூர் முத்தாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் எஸ்.முருகானந்தம் (42). மாற்றுத்திறனாளியான இவர் 600 மஞ்சள் பைகளைத் தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

கோவையில் பழ வியாபாரி ஒருவர் மஞ்சள் பை கொண்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு 5 ரூபாய் தள்ளுபடி என்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் இயங்கிவரும் முக்கு கடை சுப்பு என்ற ஓட்டலில் மஞ்சள் பை வடிவத்தில் பரோட்டா சுட்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறி வருகின்றனர். இதன் காரணமாக மதுரையில் மஞ்சள் பை பரோட்டா தற்போது பிரபலமாகி வருகிறது.

பிளாஸ்டிக் ஒழிப்பில் தமிழக அரசுடன் இணைந்து பொதுமக்களும் கைகோத்துள்ளது ஆரோக்கியமான நிகழ்வு என சூழலியல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT