தமிழகம்

முதல்வர் தனிப்பிரிவு மனுக்களை தலைமைச் செயலகத்தில் உள்ள பெட்டியில் சேர்க்கலாம்: கரோனா பரவலையொட்டி அரசு நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, முதல்வர் தனிப்பிரிவில் மனு அளிக்க விரும்புவோர் தலைமைச் செயலக வாயிலில் உள்ள பெட்டியில் மட்டுமே மனுக்களை சேர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வரின் தனிப்பிரிவு தனி அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முதல்வரின் தனிப்பிரிவில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தினமும் மனு அளித்து வருகின்றனர். கரோனா பரவல் அதிகரித்துள்ள சூழலிலும், பொதுமக்கள் மனுக்கள் அளிக்க வருவதால், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் தொய்வு ஏற்படுகிறது.

எனவே, பொதுமக்கள் மனுக்களை நேரடியாக அளிப்பதை தவிர்த்து, தலைமைச் செயலகவாயிலில் இதற்காக வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மட்டுமே மனுக்களை சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது. மிகவும் அத்தியாவசிய சூழலில் மட்டுமே முதல்வரின் தனிப்பிரிவு அலுவலரை நேரில் சந்தித்துமனு கொடுக்க அனுமதிக்கப்படும்.

மேலும், முதல்வரின் தனிப்பிரிவில் நேரில் மனு அளிக்க வருவதைத் தவிர்த்து, தபால், இணையவழி, மின்னஞ்சல், முதல்வரின் உதவி மையம் சேவைகளை பயன்படுத்தியும் மனுக்களை அளித்து பொதுமக்கள் பயன்பெறலாம்.

SCROLL FOR NEXT