சென்னையில் ‘இஸ்பா’ அமைப்பின் 14-வது மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துறை செயலர் அருண்ராய், தொழில் ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன், மத்திய தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் புத்தொழில் ஆரம்பநிலை நிதிக் குழு தலைவர் எச்.கே.மிட்டல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். படம்: எம்.முத்துகணேஷ் 
தமிழகம்

தமிழகத்தில் புத்தாக்கத்தின் மூலமாக புதிய தொழில்களை உருவாக்க அரசு துணை நிற்கும்: சென்னையில் நடந்த ‘இஸ்பா’ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: புத்தாக்கத்தின் மூலமாக புதிய தொழில்களை உருவாக்க அரசு நிச்சயம் துணை நிற்கும் என்று, சென்னையில் நடந்த ‘இஸ்பா’ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

‘இஸ்பா’ (Indian STEPs and Business incubators Association) அமைப்பின் 14-வது மாநாடு சென்னையில் நேற்று தொடங்கியது. மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:

கல்வி, பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, பண்பாட்டில் மேன்மை அடைந்த மாநிலம் தமிழகம். இங்கு அறிவுசக்தி நிரம்பிய ஏராளமான இளைஞர்கள் உள்ளனர். அந்த சக்தியை உருவாக்கும் அறிவுசார் கல்வி நிறுவனங்களும் இங்குதான் அதிகம். இந்தியாவில் உள்ள மிகமுக்கியமான 100 கல்வி நிறுவனங்களில் 30-க்கும் மேற்பட்டவை தமிழகத்தை சேர்ந்தவை என்று சமீபகால புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

புத்தாக்கம், புத்தொழில் முயற்சிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக நிலவிய தொய்வு நிலையை மாற்றி, மிக விரைவில் உலகின் முன்னணி புத்தொழில் தளமாக தமிழகத்தை மாற்றும் பணிகளை முடுக்கிவிடும் நோக்கில் செயல்பட்டு வருகிறோம். தமிழ்நாடு புத்தொழில், புத்தாக்க இயக்கம் (டான்சிம்) மூலம் பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த இயக்கம் மூலமாக இதுவரை 29 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்க உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை பல மடங்காக உயர்த்தப்படும்.

‘இஸ்பா’ போன்ற புத்தொழில் காப்பகங்கள் மூலமாகவே இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள புத்தொழில் காப்பகங்களை உலகத் தரத்துக்கு மேம்படுத்தவும், அனைத்து மாவட்டங்களிலும் தேவையான அளவுக்கு இத்தகைய புத்தொழில் காப்பகங்கள், புத்தொழில் பூங்காக்களை உருவாக்கவும் செயல் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.

தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 60 நிறுவனங்களில் சுமார் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல விண்வெளி, மின் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த நிறுவனங்களையும் உருவாக்க திட்டமிட்டுள்ளோம். வரும்நாட்களில் புத்தொழில் முதலீட்டாளர்களின் பணத் தோட்டமாக தமிழகம் உருவெடுக்கும்.

தமிழகத்தில் கணினி புரட்சியை, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவாக்கினார். நமக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மென்பொருள் உருவாக்கித் தந்த காலம் முடிந்துவிட்டது. வெளிநாட்டு நிறுவனங்கள் நம்மிடம் இருக்கும் பொருட்களை வாங்கும் சூழ்நிலை உருவாகிறது. இதை சாஸ் புரட்சி என்கின்றனர். சேவை வழி மென்பொருள் துறையில் உலகளாவிய மையமாக சென்னை மாறியுள்ளது. சமீபத்தில் சென்னையில் உருவான இத்துறை சார்ந்த ஒரு நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தையில் சாதனை படைத்துள்ளது.

பின்டெக், எஜுடெக், மீடியா டெக், ஹெல்த் டெக் என பல களங்களில் நம் இளைஞர்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் தொழில்நுட்பங்களை உருவாக்கத் தொடங்கிவிட்டனர்.

இதோடு நாம் நின்றுவிடக் கூடாது. அடுத்த சாதனைக்கு தயாராக வேண்டும். புதிய நூற்றாண்டின் புதிய சவால்களை எதிர்கொள்ளவும், புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் புத்தாக்கத்தின் மூலமாக புதிய தொழில்களை உருவாக்கவும் இந்த அரசு நிச்சயமாக துணை நிற்கும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், துறை செயலர் அருண்ராய், தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் சிஜிதாமஸ் வைத்யன், மத்திய தொழில்,உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் புத்தொழில் ஆரம்பநிலை நிதிக் குழு தலைவர் எச்.கே.மிட்டல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக, இஸ்பா தலைவர்கே.சுரேஷ்குமார் வரவேற்றார். நிறைவாக, துணைத் தலைவர் ஏ.பாலச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT