தமிழகம்

தமிழக காவல் துறையினருக்கான துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவல் துணை ஆணையர்: பதக்கம் வென்ற சென்னை போலீஸாருக்கு காவல் ஆணையர் பாராட்டு

செய்திப்பிரிவு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள துப்பாக்கி சுடும் தளத்தில், கடந்த 6 முதல் 8-ம் தேதி வரை தமிழ்நாடு மாநில காவல் துறையினருக்கான துப்பாக்கி சுடும் போட்டி–2022 நடைபெற்றது. இப்போட்டியில், தமிழக காவல் துறையின் வடக்கு மண்டலம், மத்திய மண்டலம், மேற்கு மண்டலம், தெற்கு மண்டலம், சென்னை பெருநகர காவல், கமாண்டோ படையைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் போலீஸார் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டம் துணை ஆணையர் கார்த்திகேயன் காவல் அதிகாரிகளுக்கன பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். தண்டையார்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கிருஷ்ணசாமி 25 அடி தூர பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார்.

அயனாவரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரவீன்குமார் 40 அடி தூர இலக்கு மற்றும் 15 அடி துர இலக்கு பிஸ்டல் ரக துப்பாக்கி சுடும் போட்டிகளில் முறையே வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கத்தை வென்றார். புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலர் கணேஷ் 300 மீட்டர் இன்சஸ் ரைபிள் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலம் வென்றார்.

ஆயுதப்படைக் தலைமைக் காவலர் ஜீவராஜ் 300 மீட்டர் இன்சஸ் ரைபிள் ரக துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆயுதப்படை தலைமைக் காவலர் சசிகுமார் 50 அடி தூர இலக்கு, கார்பன் துப்பாக்கி சுடும் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆயுதப்படை பெண் காவலர் நந்தினி 50 அடி தூர இலக்கு, கார்பன் துப்பாக்கி சுடும் போட்டியில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றார். சென்னை பெருநகர காவல் குழுவினர் துப்பாக்கி சுடும்போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள், 4 வெள்ளிப் பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 10 பதக்கங்களை வென்றனர்.

மேலும் டி.பி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி தலைமையிலான ஆயுதப்படைக் தலைமைக் காவலர் பாரதி, மைலாப்பூர் தலைமைக் காவலர் கோமதி, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் நித்யகலா, புனித தோமையர் மலை காவல் நிலையக் காவலர் செமிரா, ஆயுதப்படைக் காவலர்கள் சிந்து, சந்தியா, சிவரஞ்சனி ஆகியோர் அடங்கிய பெண்கள் அணியினர் ஒட்டு மொத்தமாக மூன்றாவது இடம் பிடித்து கேடயம் பெற்றனர்.

இந்நிலையில் போட்டியில் வெற்றி பெற்ற அனைவரையும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று அழைத்து பாராட்டி வெகுமதி அளித்து கவுரவித்தார்.

SCROLL FOR NEXT