தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் ஆஞ்சநேயர் கோயில் இடிக்கப்பட்டது. 
தமிழகம்

தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்: பக்தர்களின் கடும் எதிர்ப்புக்கு இடையே இடிப்பு

செய்திப்பிரிவு

தாம்பரம்: தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் அடையாறு ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, வருவாய்த் துறை மற்றும் நீர்வள ஆதாரத் துறையினர் கோயிலை இடிக்க முடிவு செய்து, கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் வழங்கினர். இதற்கு, நிர்வாகிகள், பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த டிசம்பர் 19-ம் தேதி கோயிலை இடிக்க அதிகாரிகள் வந்ததால் கோயில் உள்ளேயே அமர்ந்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சிலர் கோபுரத்தின் உச்சியில் ஏறி, கோயிலை இடிக்கக் கூடாது என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். போதிய போலீஸார் பாதுகாப்பு இல்லாததால் அதிகாரிகள் கோயிலை இடிக்காமல் திரும்பிச் சென்றனர்.

கோயிலை இடிக்கக் கூடாதுஎன பக்தர்கள் பல்வேறு வகைகளில் போராட்டங்களை நடத்தி, அரசுக்கு கோரிக்கையும் வைத்திருந்தனர்.

இந்நிலையில், நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயில் இடிக்கப்பட்டது. கோயில் இடிக்கப்பட்டபோது கோபுரக் கலசங்கள் தரையில் விழுந்ததைப் பார்த்து மக்கள் அழுதனர். "கோயில் இடிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது.

தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்ற பின் இந்து கோயில்கள் மட்டும் குறிவைத்து இடிக்கப்படுகின்றன. இதுவரை சுமார் 160 கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளன" என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கோயில் இடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

SCROLL FOR NEXT