ஒமைக்ரான் தொற்றுள்ளதா என்பதை கண்டறியும் ஆய்வை பெங்களூருவுக்கு அனுப்புவதற்கு பதிலாக சென்னையில் நடத்த அனுமதி கோரியுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.
புதுச்சேரி ராஜீவ்காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் கரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடும் முகாமை ஆளுநர் தமிழிசை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரண்டு தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். முதல் டோஸ் போடாதவர்கள் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். அரசு ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என கூறியிருந்தோம். 5 சதவீதம் பேர் தான் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அரசு ஊழியர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசியை அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டும்.
கரோனா அதிகரிப்பால் அதிக கட்டுப்பாடுகள் போடுவது குறித்து கோவிட் மேலாண்மை அவசரக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும். ஏற்கெனவே நான் அறிவுறுத்தி வந்தபடி தடுப்பூசி செலுத்தியதற்கான ஆவணங்கள் தற்போது நாடு முழுவதும் கேட்கத் தொடங்கியுள்ளனர். ஆகவே தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக உள்ளது.
புதுச்சேரியை பொருத்தவரை தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை. தடுப்பூசியால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. உருமாறிய கரோனா தொற்று ஏற்பட்டாலும் நாம்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
தற்போது ஒமைக்ரான் தொற்றுள்ளதா என்பதை அறிய பரிசோதனை மாதிரிகளை பெங்களூருவுக்கு அனுப்பி வருகிறோம். அதை சென்னை பரிசோதனை கூடத்துக்கு அனுப்ப அனுமதி கோரி மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். புதுச்சேரியிலும் பரிசோதனை கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுமுடக்கம் மட்டும்கரோனா விஷயத்தில் தீர்வாகாது.சூழ்நிலைக்கு ஏற்ப விஞ்ஞானப்பூர்வமாக ஆலோசிப்போம். மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கையோடு கண்காணிப்பிலும் ஈடுபடுகிறோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குநர் ராமுலு, மருத்துவ கண்காணிப்பாளர் சுஜாதா, சுகாதாரத்துறை துணை இயக்குநர் முரளி, ரகுநாதன், ராஜாம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இரண்டு தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்குப் பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். முதல் டோஸ் போடாதவர் கள் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.