ராஜபாளையம் 30-வது வார்டு தோப்புப் பட்டி பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகளுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என புகார் எழுந்தது.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திர மடைந்த அப்பகுதி மக்கள் ராஜ பாளையம்-சங்கரன்கோவில் விலக்கு பகுதியில் நேற்று காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த தெற்கு காவல் நிலைய போலீஸார் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
நகராட்சி அதிகாரிகள் மெத்தனமாகச் செயல்படுவதாகக் கூறி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறியலைக் கைவிட மறுத்தனர்.
இதையடுத்து அப்பகுதிக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், மக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.
மறியலால் மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ் சாலையில் சுமார் அரைமணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.