நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைத்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் மனோதங்கராஜ், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். 
தமிழகம்

நாகர்கோவில் நாகராஜா கோயிலில் தைத்திருவிழா கொடியேற்றம்: 18-ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது

செய்திப்பிரிவு

நாகர்கோவில் நாகராஜா கோயில்தைத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. குமரிமாவட்டத்தில் உள்ள கோயில்களில் 3 நாட்களுக்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ஆண்டு தோறும்தைத்திருவிழா விமரிசையாக நடைபெறும். நடப்பாண்டு இத்திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. திருச்சூர் தரன் நம்பூதிரி தந்திரி பூஜைசெய்தார். பின்னர் கொடிமரத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, கோயில் மேலாளர் ஆறுமுகதரன் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மாலையில் பரதநாட்டியம், சுவாமி புஷ்பக விமானத்தில் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றது. 2-ம் நாள் விழாவான இன்று காலை, மாலையில் புஷ்பகவிமானத்திலும், 3-ம் நாள் விழாவில் சிம்ம வாகனத்திலும், 4-ம் நாள் விழாவில் இரவு கமல வாகனத்திலும் சுவாமி எழுந்தருளுகிறார். 5-ம் நாள் விழாவில் காலை நாகராஜா, அனந்த கிருஷ்ணசுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவில் பஜனையும், ஆதிசேஷ வாகன பவனியும் நடைபெறுகிறது.

9-ம் நாள் விழாவான வரும் 18-ம் தேதி காலை 7.30 மணிக்கு விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது. இரவில் சப்தாவர்ணம் நடைபெறு கிறது. விழா நிறைவு நாளான 19-ம்தேதி நாகராஜா கோயில் குளத்தில் சுவாமிக்கு ஆராட்டு, இரவு 9.30 மணிக்கு ஒழுகினசேரி ஆராட்டுதுறையில் இருந்து கோயிலுக்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குமரி மாவட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் கோயில்கள் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு சமூக இடைவெளியுடன் தரிசனத்துக்கு அனுமதிக் கப்பட்டனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

SCROLL FOR NEXT